கொண்டாட்டத்தில் மதுரை; இன்று காலை மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.நேற்றுமுன்தினம் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
இதைதொடர்ந்து இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.இதற்காக ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ரூ.500 கட்டண சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டண சீட்டு பெற்றவர்கள் வடக்கு - கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகேயுள்ள வழியாக வடக்கு கோபுரத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.