அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: எந்தெந்த மாடுகளுக்கு அனுமதி.? புதிய விதிமுறைகளை கட்டமைத்த மாவட்ட நிர்வாகம்.!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிமன்றங்களின் அனுமதி உடன் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பார்கள். பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜல்லிக்கட்டு குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு நடத்தப்படும். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வரைமுறை மற்றும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனைகளும் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான விண்ணப்பங்களும் தற்போது இருந்தே பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காளைகளின் வயது திமில் அளவு மற்றும் கொம்பின் நீளம் ஆகியவற்றிற்கும் சிறப்பு வரையறைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மூன்று முதல் எட்டு வயதிற்கு உட்பட்ட காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற பொது உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது. கலப்பின மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகளை பதிவு செய்பவர்கள் விண்ணப்ப படிவத்தோடு காளைகளின் திமிர் மற்றும் அவற்றின் உரிமையாளரின் புகைப்படத்தோடு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.