மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை...! தமிழகத்திற்கு 2 ரயில்... தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி...!
பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்கின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மூன்று புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும். இதனை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதே போல் மதுரையில் நடைபெறும் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் வி.சோமண்ணா பங்கேற்கிறார். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், தொடக்க நாளில், சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இதேபோல, மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் தொடக்க நாளில், மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும். இந்த ரயில்களின் வழக்கமான சேவை 2024 செப்டம்பர் 2 முதல் தொடங்க உள்ளது.