தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி.. சிவபெருமானுக்கு பிடித்த சிவன் கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?
திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் திருவாசி எனும் ஊரில் மாற்றுரைவதீஸ்வரர் அமைந்துள்ளது. பாலாம்பிகையை மனம் புரிந்த ஈசன் தனது திருவிளையாடலை நிகழ்த்திய புண்ணிய ஸ்தலம் என்ற சிறப்பினை இந்தக் கோவில் பெற்றுள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்றதில் 62 ஆவது பாடல் பாடப் பெற்ற திருத்தலம் இதுவாகும். சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சிவனின் விருப்ப தளம் எனக் கூறப்படுகிறது.
புராண கதைகளின்படி, ஒருமுறை இந்தப் பகுதியில் ஆட்சி செய்து வந்த கொல்லிமழவன் என்பவரின் மகள் தீராத நோயால் அவதிப்பட்டுள்ளார், பல்வேறு வைத்தியம் பார்த்த மன்னன், நோய் தீராததால் நோயை தீர்க்கும் பொறுப்பை ஈசனிடமே விட்டு விட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது அங்கு வந்த திருஞானசம்பந்தர், "துணிவளர் திங்கள் துளங்கி விளங்க" எனும் பதிகம் பாடி நோயை தீர்த்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், கொல்லிமழவன் மகளைத் தாக்கிய நோயை மடக்கி ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார் ஈசன். இதனால் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது நடனமாடுகின்றார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு. வன்னி தலமரம். அன்னமாம்பொய்கை, சிலம்பாறு தீர்த்தமாக உள்ளன. இத்திருத்தலம் அன்றைய காலம் தொட்டு தீராத நோய்களை தீர்க்கும் திருத்தலமாக மக்களால் நம்பப்படுகிறது.
திருத்தல யாத்திரையின் போது அடியாருக்கு உணவு வழங்குவதற்காக ஒவ்வொரு முறையும் சுந்தரர் ஈசனிடம் பொன் பெறுவது வழக்கம். அவ்வாறு ஒரு முறை பொன் பெறும் போது, ஈசனே மாற்று உருவம் எடுத்து வந்து சுந்தரர் பெற்ற தங்கத்தின் தரத்தை மதிப்பிட்டு கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இத்திருத்தலத்திற்கு மாற்றுரைவதீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் புராணக்கதை உள்ளது.
சிறப்பு வழிபாடு: பால் குடிக்காமல் அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள் இங்குள்ள அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.
அமைவிடம்: திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் திருவாசி உள்ளது. திருச்சியில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் திறந்திருக்கும்.
Read more ; மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே படகு கவிழ்ந்து விபத்து..!! ஒருவர் பலி.. மீட்பு பணி தீவிரம்