ரூ.500 கோடியில் சொகுசு பங்களா! ரூ.1 கோடி செலவில் நவீன கழிவறை!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ருஷிகொண்டா மாளிகை!!
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்டா கடற்கரை அருகே 500 கோடி ரூபாய் அரசு பணத்தில் கட்டிய சொகுசு மாளிகை, அம்மாநில அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகரமாக்க முயற்சித்தார். இதனால், அப்போதைய அமைச்சர் ரோஜாவின் தலைமையில், சுற்றுலா வளர்ச்சி கழகம்சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா எனும் இடத்தில் இருந்த மிக அழகான மலையின் ஒருபுறம் தரைமட்டமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், இங்கு சுற்றுலாவுக்கான கட்டிடங்கள் மட்டுமே கட்டப்படுகிறது என அப்போது அமைச்சராக இருந்த ரோஜா அறிவித்தார். விசாகப்பட்டினம் தலைநகராக அறிவித்ததும், அங்கு ஜெகன் தங்குவதற்கு சொகுசு பங்களா மிகவும் ரகசியமாக கட்டப்பட்டுள்ளது.
அங்கு மொத்தம் 7 சொகுசு பங்களாக்கள் அருகருகே கட்டப்பட்டுள்ளன. ரூ.500 கோடிக்கும் மேல் மக்கள்பணத்தை செலவு செய்துள்ளனர். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநிலத்தின் முதல்வர், மக்கள் பணத்தை செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், மாளிகை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு நாள் கூட வசிக்காமல் ஜெகன் பதவி இழந்தார். இப்போது ருஷிகொண்டா மாளிகை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பங்களாவும் ஆச்சரியபட வைக்கிறது. இதில் உள்ளநாற்காலிகள், டேபிள்கள், கட்டில், மெத்தைகள், சினிமா அரங்கு, நீச்சல் குளம் என பார்ப்போரை வியக்க வைக்கின்றன. ஒவ்வொரு மின்விசிறியும் ரூ.7 லட்சம் வரை மதிப்பு கொண்டவை என கூறப்படுகிறது.
கழிவறையில் ஏசி வசதியும் உள்ளது. குளிர்காலத்தில் ஹீட்டர் வசதியும் உள்ளது. இவை சீதோஷ்ண நிலைக்கேற்ப தானாகவே இயங்கும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிவறையும் 480 சதுர அடியில் கட்டியுள்ளனர். ஏற்கனவே ஜெகன் மீது அதிருப்தியில் இருக்கும் ஆந்திரா மக்கள், ருஷிகொண்டா மாளிகை விவகாரத்தில் கடும் கோபம் அடைந்துள்ளனர்.