தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வரும் 12-ம் தேதி மீண்டும் மழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், நேற்று முதல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகலாம். இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதனால், இன்று முதல் வரும் 10ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 12ம் தேதி, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான பனி மூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது..