ரயில் பயணத்தில் மலர்ந்த காதல்..!! 40 வயது நபரை நம்பி வந்த 27 வயது இளம்பெண்..!! கடைசியில் செம ட்விஸ்ட்..!!
தென்காசி மாவட்டம் புளியங்குடி, பாட்டாகுறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் காயத்ரி (27). இவர், கடந்த 2017இல் மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அடிக்கடி இரயில் பயணம் செய்தபோது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த அருள்ராயன் (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அருள்ராயன் காயத்ரியிடம் தன்னை விஜிலென்ஸ் அதிகாரி என அறிமுகம் செய்து பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறி, இருவரும் மதுரையில் வீட்டிற்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டனர். தனியாக வீடு எடுத்து இரண்டு ஆண்டுகளாக குடித்தனமும் நடத்தியுள்ளனர். இதற்கிடையே, தன்னை மாமனார் - மாமியார் வீட்டிற்கு அழைத்துச்செல்ல காயத்ரி வலியுறுத்த, தொடர் வேலை - விடுமுறை இல்லை என அருள்ராயன் பல காரணம் கூறி தட்டிக்கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நாட்கள் செல்லசெல்ல இருவருக்கும் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தனது மனைவியை சமாதானம் செய்த அருள்ராயன், தனது மனைவியின் சொந்த ஊரான பாட்டக்குறிச்சியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, கணவர் மாதத்திற்கு 4 நாட்கள் வீட்டிற்கு வந்து செல்வதை உணர்ந்த காயத்ரி, தனது குடும்பத்தாரிடம் சொல்லி கணவர் உண்மையில் விஜிலென்ஸ் அதிகாரியா? என விசாரிக்க சொல்லியுள்ளார்.
அவர்களும் சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சென்று விசாரித்தபோது, அவர் விஜிலென்ஸ் அதிகாரியே இல்லை என்பது தெரியவந்தது. பெண்ணின் தரப்பு உண்மையை கண்டறிந்து அருள்ராயனிடம் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளது. இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையம் மற்றும் தென்காசி ஆட்சியர் அலுவகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்ற போலீசார், விசாரணைக்காக இருதரப்பையும் காவல் நிலையம் அழைக்க, அங்கு அருள்ராயன் காயத்ரியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அருள்ராயன் ஏற்கனவே 2 திருமணம் ஆனவர் என்றும் காயத்ரியை ஏமாற்றி 3-வது திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.