உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் தொலைந்து விட்டதா? டூப்ளிகேட் இன்சூரன்ஸ் காப்பி எப்படி பெறுவது..? ஈஸி டிப்ஸ் இதோ..
தங்களுக்கென்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதற்காக விலை உயர்ந்த கார்களையும் சிறுக சிறுக பணம் சேர்த்து சிலர் வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்குப் பின்பு தான் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கிறது. உங்களுடைய பணி கார் ஓட்டுவது மட்டுமின்றி அதற்கான பாதுகாப்பு விஷயங்களை செய்வதிலும் அடங்கி இருக்கிறது.
உங்கள் காரை சாலையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், எதிர்பாராத விபத்துகள் அல்லது திருட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் கார் இன்சூரன்ஸ் அவசியமாகிறது. அந்த முக்கியமான இன்சூரன்ஸ் காப்பி தொலைந்து விட்டால் விபத்து காப்பீடு பெற முடியாத நிலை உருவாகும். எனவே தொலைந்து போன இன்சூரன்ஸ் காப்பிக்கு பதிலாக புதிய காப்பி எப்படி பெறலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
இன்சூரன்ஸ் தகவல்கள் : கார் இன்சூரன்ஸ் பாலிசியில் கார் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர், வாகன தயாரிப்பு விவரங்கள், காரின் நிறம் மேலும் இன்சூரன்ஸ் செல்லுபடியாகும் நாட்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். காரின் மதிப்பு பொன்றவை இடம்பெற்றிருக்கும்.
டூப்ளிகேட் இன்சூரன்ஸ் நகல் பெறுவது எப்படி?
* கார்கள் வாங்கும் போது கண்டிப்பாக இமெயில் முகவரி கேட்பார்கள். இதில் இன்சூரன்ஸ் காப்பியின் நகல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும். இதனை சேகரித்து வைத்திருந்தால். எளிமையாக இன்சூரன்ஸ் பாலிசி ஆவணத்தை எடுத்துவிடலாம்.
* இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று அங்கு தமது வாகனத்தின் எண்கள் மற்றும் மொபைல் போன் எண்ணை பதிவு செய்தால் பாலிசி காப்பி கிடைத்து விடும். இதனை எளிதாக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
* மற்றொன்றாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் கஸ்டமர் சர்வீஸ் வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வருகிறது. அதில் உரிய தகவல்கள் பதிவு செய்தால் வாட்ஸ் அப்பில் நமக்கு தேவையான இன்சூரன்ஸ் காப்பியை பெற்று விடலாம்.
* அடுத்தாக காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று வாகன எண்ணின் தகவலை தெரிவிப்பதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் டூப்ளிகேட் இன்சூரன்ஸ் காபி கிடைத்துவிடும். ஆனால் இந்த ஆவணங்களை பெற வாகனத்தின் ஆர்சி புக் மற்றும் வாகன உரிமையாளரின் அடையாள அட்டை கண்டிப்பாக தேவைப்படும்.
இன்சூரன்ஸ் டூப்ளிகேட் பெறுவது எப்படி?
உங்கள் இரு சக்கர வாகனம் காப்பீட்டு செய்யப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று அங்கு இன்சூரன்ஸ் எடுத்த போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அடுத்தாக இரு சக்கர வாகனத்திற்குப் பதிவு செய்யப்பட்ட பாலிசியைத் தேர்ந்தெடுத்து, பைக் இன்சூரன்ஸ் நகல் பதிவிறக்கத்தைக் கிளிக் செய்தால் உடனடியாக டூப்ளிகேட் கிடைத்து விடும்.
அடுத்ததாக தாங்கள் இரு சக்கர வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்த நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணை அழைத்தோ அல்லது கடிதம் மூலமாகவோ உங்கள் பாலிசி ஆவணத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை உங்கள் காப்பீட்டாளர் உறுதி செய்ய. அப்போதுதான் டூப்ளிகேட் பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதனையடுத்து சரிபார்ப்புக்கு பிறகு டூப்ளிகேட் ஆவணங்கள் அனுப்பிவைக்கப்படும்.