ரேஷன் கார்டு தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்!! ஈஸியாக விண்ணப்பித்து வாங்குவது எப்படி?
ரேஷன் கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அதிலும் தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. நாம் ரேஷன் கார்டை தவறுதலாக தொலைத்துவிட்டால் மறுபடியும் புதிய ரேஷன் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
ரேஷன் கார்டு இல்லாமல் மாதாந்திரம் உணவுப் பொருட்களை வாங்க முடியாது. ஒரு குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு, அப்ளை செய்த பிறகு முறைப்படி அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்த பின்னர் ரேஷன் அட்டை வழங்குவார்கள். இதற்கு 3 - 5 மாதங்கள் வரை கூட எடுக்கலாம். சில சமயங்களில் சரியான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் நிராகரிக்கப்படும். இப்படி நாம் வாங்கிய ரேஷன் கார்டை தவறுதலாக தொலைத்து விட்டால் என்ன செய்வது. மறுபடியும் ரேஷன் கார்டை எப்படி பெற்றுக்கொள்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் கார்டை திரும்ப பெறுவது எப்படி?
ரேஷன் அட்டை தொலைந்து விட்டால், உடனே https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். இங்கு தான் நீங்கள் தொலைந்த ரேஷன் அட்டை பற்றி பதிவு செய்ய முடியும்.
- லிங்க் ஓபன் ஆனதும் உங்கள் பயனாளர் IDஐ உள்ளிட வேண்டும்.
- பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரும்
- அதை ஸ்கிரீனில் பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.
- இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கத்தை காண்பீர்கள்.
- இதில் கேட்கப்படும் விவரங்களை படிவு செய்து, அந்த காப்பியை PDF ஆக சேமிக்க வேண்டும்.அல்லது டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
- இந்த காப்பியை பிரிண்ட் போட்டு, உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதற்கு சில நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதுத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதே போல், புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது ஈஸியாகி விட்டது. ஆன்லைனில் நீங்களே இதற்கான செயல்முறையை செய்யலாம். அதற்கு தேவையான ஆவணங்கள், ஆதார், இருப்பிட சான்று, புகைப்படம், திருமண சான்றிதழ்.
- https://www.tnpds.gov.in/ இந்த லிங்குக்குள் செல்ல வேண்டும்.
- திரையில் இருக்கும் மின்னணு அட்டை சேவைகள் பிரிவில் உள்ள ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
- அப்போது இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படும். அதை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
- பின்னர் குடும்பத் தலைவரின் படத்தை பதிவேற்றி, Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இந்த படிகள் முடிந்த பிறகு ஒரு Reference Number வழங்கப்படும்.