Lok Sabha | ’நம்ம கேட்டத தரமாட்டாங்க போலயே’..!! நேரடியாக தலைமையை அழைத்து வரும் செல்வப்பெருந்தகை..!!
கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை திமுக கூட்டணியில் கொமதேக, கமல்ஹாசன் ஆகியோருக்கும் இடம் ஒதுக்க வேண்டியுள்ளது. தேமுதிகவும் கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்குவது எனவும், அதில் ஒன்றை கமல்ஹாசனுக்கு வழங்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி தொகுதியில் தற்போது எம்.பி.யாக சு.திருநாவுக்கரசர் உள்ள நிலையில், அந்த தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கி, அங்கு துரை வைகோ போட்டியிட இருப்பதகாவும், அதனால் திருநாவுக்கரசர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வப்பெருந்தகை வைகோவை சந்தித்து பேசியுள்ளார். திருச்சி தொகுதியை விட்டுக்கொடுக்குமாறு வைகோவிடம் செல்வப்பெருந்தகை கேட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையைவிட குறைவாக பெற விருப்பம் இல்லை. திமுக 8 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்க அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அழைப்பின் பேரில் நேற்று செல்வப்பெருந்தகை டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரும் சென்றுள்ளனர்.
கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அழைத்து வந்து திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவது என முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary : DMK-Congress seat distribution issue