Lok Sabha elections 2024: 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை பறிமுதல்..! 2ஆம் இடத்தில் தமிழகம்..!
Lok Sabha elections 2024: மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலின் போது வருமான வரித்துறையினர் மிகப்பெரிய வெற்றியாக ரூ.1100 கோடி ரொக்கம் மற்றும் நகைகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 லோக்சபா தேர்தலின் போது 390 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த பறிமுதல் 182 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. வருமான வரித்துறை, மே 30க்குள், சுமார் 1100 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிக பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
இந்த இரண்டு மாநிலங்களிலும் தலா ரூ.200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது இடத்தில 150 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மொத்தம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த மார்ச் 16ம் தேதி முதல் நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வந்தது. அதன்பிறகு, வாக்காளர்களை பாதிக்கக்கூடிய கணக்கில் வராத பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைக் கண்காணித்து பறிமுதல் செய்வதில் வருமான வரித்துறை விழிப்புடன் இருந்து வருகிறது.
மார்ச் 16 முதல் நாடு முழுவதும் MCC அமல்படுத்தப்பட்டதில் இருந்து வாக்காளர்களை பாதிக்கக்கூடிய பணம், மதுபானம், இலவசங்கள், மருந்துகள், நகைகள் மற்றும் பிற பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதிசெய்ய மத்திய முகமைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.