Lok Sabha Election | நெல்லை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..? மீண்டும் தட்டிப் பறிக்குமா திமுக..?
நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் கிராமப்புறப் பகுதிகளே அதிகம். இந்து நாடார், கிறிஸ்துவ நாடார், முக்குலத்தோர், யாதவர், பட்டியலினத்தவர், வேளாளர், இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து வாழும் இந்தத் தொகுதியில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.
நெல்லை எம்பி ஞானதிரவியம்
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம். அன்னை குழும நிறுவனங்களின் நிறுவனரான இவருக்கு தென்காசி, பழவூர், பணகுடி பகுதிகளில் சொந்தமாக காற்றாலைகள் இருக்கின்றன. அவை போக, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார். பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே ஆட்சியரை, அவர் மிரட்டிய காட்சி தமிழ்நாட்டையே அதிரவைத்தது. நெல்லை திருமண்டலத்தில், பேராயர் பர்னபாஸுக்கும், ‘லே’ செயலாளர் ஜெயசிங்குக்கும் இடையேயான பனிப்போரில், ஜெயசிங் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் ஞானதிரவியம்.
தனது எம்.பி பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் கீழ் வரும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் பதவி மற்றும் உயர்கல்வி நிலைக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் திருமண்டல அலுவலகத்துக்குச் சென்று பேராயரின் ஆதரவாளர்களைத் தாக்கியதாக எம்.பி ஞானதிரவியம் உட்பட அவரின் ஆதரவாளர்கள் 33 பேர் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. ஞானதிரவியத்தின் அடாவடி அரசியல், சர்ச்சை பேச்சால் சொந்தக் கட்சியினரே அவருக்கு மீண்டும் சீட் கிடைத்து விடாதபடி முட்டுக்கட்டைபோடுகிறார்கள். கட்சி தலைமையும் ஞானதிரவியத்திற்கு சீட் கிடையாது என்று கறாராக சொல்லிவிட்டார்களாம்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல்
வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், நெல்லை கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான ம.கிரகாம்பெல். வள்ளியூர். 1987 திமுகவில் கிளை செயலாளராக தனது கட்சி பணியைத் துவங்கி, ஒன்றிய பிரதிநிதி, மாவட்ட அவைத் தலைவர், தற்போது வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். கிரகாம்பெல் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இவரின் தாயார் கிறிஸ்துவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இந்து நாடார், கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவருக்கு ஆதரவு அளிப்பார்கள். கிரகாம்பெல் 2006 - 2011 வரை நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்தார்.
இவரின் மனைவி புவனேஸ்வரி 1996 - 2001 வரை வள்ளியூர் ஒன்றிய துணை சேர்மன் மற்றும் 2001 -2006 வரை மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தார். கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு போது திமுக நடத்திய 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் அமபாசமுத்திரம், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 4 கோடிக்கு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சமையல் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவர் பெயர் தான் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஐ-பேக் டீம் வேட்பாளராக பரிந்துரை செய்ததாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் அப்பாவு சூழ்ச்சி செய்து தோற்கடிக்கப்பட்டார். அதனால் கருணை அடிப்படையில் அப்பாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். வருகின்ற மக்களவை தேர்தலுக்கு கிரகாம்பெல் பெயர் தான் அடிபடுவதாக திமுக வட்டாரத்தில் கூறுகின்றனர்.
திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு
சபாநாயகர் அப்பாவுவின் மகனும், மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான அலெக்ஸ் அப்பாவு மக்களவை தேர்தலில் போட்டியிடத் தீவிரமாக இருக்கிறார். தமிழக வூஷூ அசோசியேஷன் மாநில தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராதாபுரம் தான் அலெக்ஸ் அப்பாவுக்கு சொந்த ஊர். இவர் சொந்த தொழில் செய்து வருகிறார். அலெக்ஸ் அப்பாவு மக்களைவை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அப்பாவு சபாநாயகராக இருப்பதால் சீட் கிடைப்பது கடினம் என்று திமுக வட்டார உறுப்பினர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், சபாநாயகர் அப்பாவு, திமுக அரசு கிறிஸ்தவர்களுக்கு முதன்மையானது என குறிப்பிட்டது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் கருத்துகளின் விளைவுகள் மக்களவை தேர்தலில் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சபாநாயகர் அப்பாவுக்கும், முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பனுக்கும் இடையிலான கோஷ்டிப்பூசல் ஊரறிந்த விஷயம். அரசியலில் ஆர்வம் காட்டிவரும் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் கட்சிப் பதவிக்கு முயன்றபோது, மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் முட்டுக்கட்டை போட்டுவந்துள்ளார். இதனால் நேரடியாக கட்சித் தலைமையைச் சந்தித்த அப்பாவு, தன்னுடைய மகன் அலெக்ஸுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொறுப்பு வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கிய எட்வின்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கிய எட்வின், மக்களவை தேர்தலில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இவரின் மனைவி சௌமிய எட்வின் நாங்குநேரி யூனியன் சேர்மனாக இருக்கிறார். ரியல் எஸ்டேட், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒடுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தார். முன்னாள் சபாநாயகரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பனுக்கும் எதிராக திமுக தலைமையிடம் புகார் கொடுத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான ஆரோக்கிய எட்வின். கனிமொழியின் மூலம் திருநெல்வேலி மக்களவை தேர்தலில் சீட் கிடைக்க முயற்சி செய்கிறார். திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் யாருக்கு திமுக தலைமை சீட் கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : Doctor | நோயாளிகளே நோட் பண்ணிக்கோங்க..!! இனி மருத்துவர்கள் இப்படி செய்தால்..!! அரசு அதிரடி உத்தரவு..!!