72 வயது முதியவருடன் லிவ் இன் வாழ்க்கை..!! நகை, பணத்தை வாரிக் கொடுத்ததால் கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்..!!
நவிமும்பை ராய்கட் பகுதியைச் சேர்ந்தவர் ராம்தாஸ் கெய்ரே (72). இவருக்கு, இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், இருவருமே இறந்துவிட்டனர். இதனால், தனது சொந்த ஊரிலேயே தனியாக வாழ்ந்து வந்தார். அப்போதுதான், கவிதா என்ற பெண்ணின் அறிமுகம் ராம்தாஸுக்கு கிடைத்தது. தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு கவிதாவின் துணை ஆறுதலை கொடுத்துள்ளது.
பின்னர், கடந்த ஆண்டில் இருந்து கவிதாவுடன் லிவ் இன் முறையில் வாழ ஆரம்பித்தார். ஓரிரு மாதங்களிலேயே, ராம்தாஸையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதை ராம்தாஸ் எதிர்பார்க்க இயில்லை. உடனே கவிதாவுக்கு தங்க நகைகள், பணத்தை வாரிக் கொடுத்துள்ளார். ஆனால், அனைத்தையும் அவரிடமிருந்து சுருட்டிக்கொண்ட கவிதா, அங்கிருந்து கிளம்பி மும்பைக்கு வந்துவிட்டார். அத்துடன், அங்குஷ் என்ற நபரை திருமணமும் செய்து கொண்டார்.
இதையடுத்து, உச்சகட்ட கோபமடைந்த ராம்தாஸ் கவிதாவிடம் சென்று, தான் கொடுத்த தங்க நகைகள், பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். உடனே கவிதா, இதைப்பற்றி தன்னுடைய கணவரிடம் சொன்னார். பின்னர், இருவரும் சேர்ந்து ராம்தாஸை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் ராம்தாஸ் ஊருக்கு சென்றார்கள். கவிதாவின் கணவர் அங்குஷ், அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கினார். ஆனால், ராம்தாஸை தனிமையில் சந்தித்த கவிதா, மீண்டும் அவரிடம் நட்பாக பேச துவங்கினார். சம்பவத்தன்று ராம்தாஸ் வீட்டிற்கும் சென்று கவிதா தங்கினார்.
ராம்தாஸிற்கு கொடுத்த சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டுவிட்டு ராம்தாஸ் மயக்கம் அடைந்தவுடன் லாட்ஜில் தங்கியிருந்த தனது கணவரை வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து ராம்தாஸ் தலையில் பெரிய ஆயுதத்தால் சரமாரியாக அடித்துள்ளனர். பிறகு அவரை கழுத்தையும் நெரித்து கொன்றுவிட்டு, தங்கள் ஊருக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, ராம்தாஸ் மகன், தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்தபடியே இருந்துள்ளார்.
ஆனால், போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், மகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதே ஊரிலுள்ள தன்னுடைய சொந்தக்காரருக்கு போன் செய்து, தன்னுடைய அப்பாவை பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது ராம்தாஸ் வீடு பூட்டி இருந்தது. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலீசார் வந்து கதவை உடைத்துக் கொண்டு பார்த்தபோதுதான், ராம்தாஸ் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ததாக ரிப்போர்ட் வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டபோதுதான், ராம்தாஸுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண், சமீபத்தில் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, கவிதாவை தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், மும்பையில் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அங்குஷூம் சேர்ந்து இந்த கொலையை செய்தது உறுதியானது. இப்போது புதுமண ஜோடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.