பிறருக்காக வாழுங்கள்!… தற்கொலை எண்ணமே வராது!… தனது தற்கொலை எண்ணம் குறித்து பகிர்ந்த ஆஸ்கர் நாயகன்!
பிறருக்காக வாழுங்கள்!… தற்கொலை எண்ணம் வராது!… தனது தற்கொலை எண்ணம் குறித்து பகிர்ந்த ஆஸ்கர் நாயகன்!
நாட்டில் தற்கொலைகள் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நானும் பலமுறை தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும், எனது அம்மாவின் நம்பிக்கையான வார்த்தைகளே என்னை அதிலிருந்து காப்பாற்றியது என்றும் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். ரோஜா படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து அவருக்கு அந்த படத்திலேயே தேசிய விருதையும் பெற்று தந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழிப் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளரானார். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிந்த இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் ஹாலிவுட்டுக்கும் சென்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக பெற்று வந்தார். இது தமிழர்களிடையே பெருமையடைய செய்தது. இவரது இசைக்கு இன்றளவும் மவுசு அதிகம்.
இந்தநிலையில், பொங்கலுக்கு நடிகர் சிவகாரத்திகேயன் நடித்துள்ள அயலான் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தநிலையில், தனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது குறித்து இசையமைப்பாளர் ரஹ்மான் பேசியுள்ள பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் பலமுறை தோன்றியது. அப்போது என்னுடைய அம்மா என்னிடம் வந்து, ’நீ மற்றவர்களுக்காக வாழ வேண்டும். அப்படி இருக்கும்போது உனக்கு அந்த எண்ணம் தோன்றாது’ எனக் கூறினார். உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள்.
ஒருவருக்கு நீங்கள் இசையமைத்துக் கொடுப்பதாக இருக்கலாம். உணவு வாங்கி கொடுக்கலாம் அல்லது வெறும் புன்னகையை கூடத் தரலாம். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுவிக்கும்.அத்துடன் வாழ்க்கை மீது உங்களுக்குப் பிடிப்புக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.