செந்தில் பாலாஜியை போல இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறாரா பொன்முடி..? வெளியான பரபரப்பு தகவல்..!!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடி, செந்தில் பாலாஜியைப் போலவே இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்ள அமைச்சர்கள் பட்டியலில் பொன்முடியின் பெயர் இன்னும் இருக்கிறது. அதில், இலாகா குறித்த தகவல்கள் இல்லாமல், ‘அமைச்சர் பொன்முடி’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல செந்தில் பாலாஜிக்கும் இலாகா ஏதும் இல்லாமல் ‘அமைச்சர்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு பொன்முடி வசமிருந்த உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. அந்த விவரம் உடனடியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.