World Water Day: ஒவ்வொரு துளி நீரையும் உயிர்போல காப்போம்!… இன்று உலக தண்ணீர் தினம்!
World Water Day: கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடித்தான் வருகிறோமே தவிர, தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கம் முதலே, பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். 2040-ம் ஆண்டில், உலகில் 4-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கும் என்று யுனிசெஃப் கூறியுள்ளது. குறிப்பாக, இன்னும் இருபது ஆண்டுகளில் உலகில், 60 கோடி மக்களுக்கு கடும் தண்ணீர்ப் பிரச்னை ஏற்படும் என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது. உலகம் முழுவதும் 36 நாடுகளில், தீவிரமான தண்ணீர்ப் பிரச்னை நிலவிவருகிறது. முக்கியமாக, இந்தியக் கிராமப்புறங்களில் வசிக்கும் 6 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். எனவே, உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.
இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.