அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை அழித்துவிடுவோம்!… கிம் ஜாங் உன் மிரட்டல் எச்சரிக்கை!
தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. அதனை தூண்டும் நாடுகளை அழித்து விடுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பம் பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது. எதிர்பாராத இந்த தாக்குதலால் யோன்பியோங் தீவில் உள்ள மக்கள் உடனே வெளியேற தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. இதனிடையே அமெரிக்கா – தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்றவை அதிகரித்துள்ளதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது. இதற்கிடையில், வடகொரியா வழங்கிய கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பரிமாற்றம் தொடர்பாக வடகொரியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் அமரிக்கா கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்து விடுவோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியா தனது அணு ஆயுதப் போரைத் தடுப்பதை வலுப்படுத்த வேண்டும் என்றும், வட கொரியாவிற்கு எதிராக தென் கொரியா தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தத் துணிந்தால், அனைத்து வழிகளிலும் தென்கொரியாவை அழிப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் ஆவேசமாக கூறியுள்ளார் கிம்.