திமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்போம்..!! எத்தனை தெரியுமா..? கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி..!!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு வசம் தான் இருப்பதாகவும் மன்னர் காலத்திலும் மன்னர் நிர்வாகத்தின் கீழ் தான் கோவில்கள் இருந்ததாகவும் கூறினார். கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் எதன் அடிப்படையில் கூறினார் என வினவியுள்ளார்.
சேகர்பாபுவை பார்த்தால் சைவ பழம் போல் தெரிவதாகவும், இதுவரை 5,000 கோடிக்கு மேல் கோவில் சொத்துக்களை திரும்ப பெற்றுள்ளார் என கே.எஸ்.அழகிரி கூறினார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாலைக்கண் நோய் இருப்பதாக விமர்சித்துள்ள அழகிரி, அதனால் தான் தமிழகத்தில் தீண்டாமை உள்ளதாக அவர் பேசுகிறார் என்றார். முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை அரசின் சில நடவடிக்கைகள் தவறாக இருக்கும்பட்சத்தில், அதனை திரும்பப் பெறுகிறார் என்றும் அதன் அடிப்படையில் தான் திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
காவிரியை வைத்து கர்நாடகா பாஜகவும், தமிழக பாஜகவும் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் நேரில் பேசி அவரை சரி செய்வோம் என்றார். பாஜக அல்லாத எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டும் சோதனைகள் நடந்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமே தவிர வேறு இல்லை என்றும் வருகிற மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்” எனவும் தெரிவித்தார்.