கட்டணம் இல்லா சிகிச்சை...! இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்...! இந்த இலவச எண்ணுக்கு கால் பண்ணுங்க...!
சேலம் மாவட்டத்தில் "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் கீழ் ரூ.14.68 கோடி செலவில் சாலை விபத்தில் காயமடைந்த 12,305 நபர்களுக்கு சிகிச்சை டாக்டர் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் (81 Treatment Packages) சிகிச்சை அளிக்கப்படுகிறது.
48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம். குறிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம்.
மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல் தனியார் காப்பீட்டிலோ அல்லது பணம் செலுத்தியோ சிகிச்சையை பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம். சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி அரசு மருத்துவமனைகள், மேட்டூர் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் 21 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம்.
சேலம் மாவட்டத்தில் "இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் கீழ் ரூ.14.68 கோடி செலவில் சாலை விபத்தில் காயமடைந்த 12,305 நபர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைத்தளங்களில் (www.cmchistn.com) வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். விலை மதிப்பில்லாத மனித உயிரை பாதுகாக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவதுடன் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.