இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க என்பதை அம்பலப்படுத்துவோம்...! திமுக தீர்மானம்...
திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி. கூட்டாட்சிக் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில், இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் பெரும்பொறுப்பில் எவ்வித சமரசமுமின்றிப் பாடுபடும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் முன்னெடுத்துச் செல்லும் கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த பத்தாண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதுகாவலராகத் திகழ்ந்து வரும் நிலையில், தன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அனுமதி தந்து, அதனை மாநில உரிமை மீட்பு முழக்கமாக முன்னெடுக்கச் செய்த இளைஞர் அணியின் தாயுமானவரான கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும். மாநிலங்களின் அதிகார உரிமைகள், சட்ட உரிமைகள், நிதி உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க அரசு பறித்து வரும் நிலையிலும்கூட, தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக முன்னேற்றுகிற வகையில், ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற ஒப்பற்ற சிந்தனையுடன் திராவிட மாடல் அரசைத் தலைமை தாங்கி நடத்தி வரும் இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் -கழகத் தலைவர் அவர்களின் மக்கள் நலத் திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, ஒவ்வொரு குடும்பமும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயன்பெறும் வகையில், சிறப்பான நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எண்ணப்படி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு பெயர் பெறவும், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்திடவும், கழக இளைஞர் அணி அயராது பாடுபடும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பலவும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் அடியொற்றி, பல மாநிலங்கள் பின்பற்றுகிற வகையிலும் புகழ் பெற்றுள்ளன. முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தலைமைச் செயலகத்திற்குச் சென்றவுடனேயே மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் என்ற மகத்தானத் திட்டத்திற்குக் கையெழுத்திட்டார் கழகத் தலைவர் அவர்கள். மகளிருடன், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், அவருக்குத் துணை வருவோர் ஆகியோருக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் அளித்ததன் மூலம் 2023 டிசம்பர் மாதம் வரை இந்த விடியல் பயணம் திட்டத்தில் 404 கோடியே 6 லட்சம் முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருநங்கையர் 24 லட்சத்து 43 ஆயிரம் முறையும், மாற்றுத்திறனாளிகள் 3 கோடியே 17 லட்சத்து 27 ஆயிரம் முறையும் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விடியல் பயணத் திட்டம் தமிழ்நாட்டுப் பெண்களின் பயணச் செலவை மிச்சப்படுத்தி, மாதந்தோறும் சராசரியாக 1000 ரூபாய் அளவுக்கு சேமிப்பினை உயர்த்தியிருப்பதுடன், வேலைக்கான நேர்காணல்-சந்தைக்குச் சென்று பொருட்களை விற்றல் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளைத் தன்னம்பிக்கையுடன் தொடங்குவதற்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறது. பாலின சமத்துவம் போற்றும் திராவிட மாடல் அரசின் விடியல் பயணத் திட்டத்தை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.