’சொந்த ஊரில் வாழ விடுங்கள்’..!! ’இல்லையென்றால் நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு அனுப்பி வையுங்கள்’..!! ஆட்சியரிடம் பரபரப்பு மனு..!!
புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 142 மனுக்கள் மீது தொடர்புடைய துறைகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி கேட்டறிந்தார். அதில், 75 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பிற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், பொதுமக்கள் ஆட்சியரை நேரடியாக சந்தித்து புகார் மனுக்களை அளித்தனர். அப்போது, பெறப்பட்ட 125 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து விவரங்களை சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தான், அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர் செட்டிகுளத்தில் உள்ள அரசு நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அரியாங்குப்பம் செட்டிகுளத்தில் உள்ள அரசு நிலத்தில் 52 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் இலவச மனைப் பட்டா கேட்டு 30 முறை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மனைப்பட்டா தரவில்லை என்றால், எங்களுக்கு குடியுரிமையே வேண்டாம் என ஆவேசமாக கூறி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். சொந்த ஊரில் எங்களை வாழ விடாவிட்டால், நித்தியானந்தா இருக்கும் கைலாசாவுக்கு அனுப்பி வைத்து விடுங்கள். எங்களை கைலாசா நாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டால், நாங்கள் சொகுசாக வாழ்வோம். 50 ஆண்டுகள் வாழ்ந்த இடத்தை நாங்கள் விட்டுத் தர மாட்டோம். மக்களுக்காக அதிகாரிகள் வேலை செய்யவில்லை. நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே எங்களை வாழ விட வேண்டும்” என்றனர்.
Read More : செவிலியர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு..!! மாதம் ரூ.3 லட்சம் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!