வசதியான SC, ST பிரிவினர் தொடர்ந்து இட ஒதுக்கீடு பெற வேண்டுமா? - இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து
இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் நிலையில் உள்ளவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்க வேண்டுமா இல்லையா என்பதை சட்டமன்றம் மற்றும் நிர்வாக அமைப்புகள் தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு கூறியது.
நீதிபதி கவாய் கூறுகையில், "கடந்த 75 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். ஏற்கனவே இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் நிலையில் அவர்கள் இருந்தால், அத்தகையவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை நிர்வாகிகளும் சட்டமன்ற அமைப்புகளும் தான் எடுக்க வேண்டும்" என்றார்.
பட்டியலிடப்பட்ட சாதிகளை (எஸ்சி) துணைப்பிரிவுகளாகப் பிரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த ஆண்டு அரசியலமைப்பு பெஞ்ச் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியது. அந்த பெஞ்ச் உறுப்பினரான நீதிபதி கவாய், ஒரு தனி தீர்ப்பில், எஸ்சி மற்றும் எஸ்டிகளிடையே பணக்கார அடுக்கு (கிரீமி லேயர்) அங்கீகரிக்க மாநிலங்கள் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தத் தீர்ப்பை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கிரீமி லேயரை அடையாளம் காணும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அரசியல் சாசன பெஞ்ச் கூறி 6 மாதங்கள் ஆகியும், மாநிலங்கள் இன்னும் அதை உருவாக்கவில்லை என்றார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, சட்டமன்றம் மற்றும் நிர்வாக அமைப்புகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என, பெஞ்ச் கூறியது. இதையடுத்து, இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுப்புவதாகக் கூறி மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றார்.