நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரம் : கைதான மாணவர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம்!! பின்னணியில் இருப்பது யார்?
நீட் வினாத்தாள் கசிவு விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் பீகாரில் கைதாகி இருக்கும் மாணவர்கள் தரப்பிலிருந்து, நீட் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.
இதனிடையே, இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் எதிர்ப்பு அதிகரித்ததில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனபோதும், வினத்தாள் கசிவு தொடர்பான புகார்களை மத்திய அரசு மறுத்து வந்தது.
ஆனால் பீகாரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீட் வினாத்தாள் கசிவு நடந்து உறுதியாகி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு மாணவர்களுக்கு தலா ரூ.32 லட்சம் கட்டணமாக நிர்ணயித்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிந்ததும் அதையே ரூ40 லட்சமாக வழங்குமாறு அவர்கள் ஒப்பந்தம் செய்ததும் தெரிய வந்துள்ளது.
தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கைக்கு கிடைத்ததாகவும், அதை மாணவர்கள் மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டதாகவும் பிடிபட்டவர்கள், போலீஸ் விசாரணையில் தெரிவுத்துள்ளனர். மேலும் தங்களுக்கு கையளிக்கப்பட்ட வினாத்தாளின் கேள்விகளே அடுத்த நாள் தேர்வில் கேட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more ; கள்ளக்குறிச்சி விவகாரம் | உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!