Diwali 2024 : இன்பங்கள் மலரும் தீப ஒளியாக அமையட்டும்..!! - அரசியல் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் ஒருவருக்கொருவர் அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரௌபதி முர்மு : நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அறியாமைக்கு எதிராக அறிவும், தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாகும் என குறிப்பிட்டுள்ளார். தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அறியாமைக்கு எதிராக அறிவும், தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி : பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வு கிடைக்க வாழ்த்துவதாக பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் : நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும் என்றும், அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும், அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும், தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம் என கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகம் முழுவதும் வசித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி குறிக்கிறது.
அன்னை லட்சுமி நம் இதயங்களை அளவற்ற அன்பு மற்றும் ஆழ்ந்த இரக்கத்தால் ஒளிரச் செய்து, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு, சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்து அருள்புரிவாராக. உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.
தித்திக்கும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் : ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “தீபங்களின் வரிசை என்றழைக்கப்படும் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அருமை தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் தீப ஒளி அழித்து விடுவதுபோல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை
அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின் தத்துவம். இதற்கேற்ப, அனைவர் உள்ளங்களிலும் அறியாமை அகன்று அறிவொளி ஏற்பட வாழ்த்துகள்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்: “மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, இளைஞர் நலன், தொழிலாளர் நலன், மகளிர் நலன் என அனைத்துத் துறைகளிலும் இருள் தான் சூழ்ந்திருக்கிறது. வண்ண ஒளிகளின் திருவிழா, மத்தாப்புகளின் திருவிழா என ஒருபுறம் தீபஒளித் திருநாளை வர்ணித்தாலும் மக்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே இருக்கிறது. இந்த இருள் அகற்றப்பட்டு உண்மையான வெளிச்சம் பிறக்கும் போது தான் தீபஒளி அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருளை பழித்துக் கொண்டு மட்டும் இருப்பதில் பயனில்லை; அதை அகற்றி ஒளியேற்ற வேண்டும். அந்த ஒளியால் சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட ஜொலிக்கவும், மக்களின் வாழ்வில் இல்லாமை என்பதே இல்லாததாகி, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க தீப ஒளி வகை செய்யட்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.