ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : தமிழகத்திற்கு துணை நிற்போம்.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல்..!!
ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது பெஞ்சல் புயல் ஒருவழியாக புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆனால் கரையைக் கடந்தும் வலுவிழக்காமல் வட தமிழ்நாட்டின் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மையம் கொண்டு பெருமழையைக் கொட்டித் தீர்த்துவிட்டது. விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செமீ மழையை கொட்டித் தீர்த்துவிட்டது இந்த பெஞ்சல் புயல்.
இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வரலாறு காணாத பெருவெள்ளத்தில் சிக்கின. அத்தனை அணைகளும் நிரம்ப, உபரி நீர் பெருமளவு திறந்துவிட ஆறுகளின் கரைகளை தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் விழுப்புரம் மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை- திருச்சி இடையே ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் கேரளாவின் வயநாட்டை நினைவுபடுத்தும் வகையில் பயங்கர நிலச்சரிவும் நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிருடன் புதையுண்டு போயினர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டமும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழகத்தில் ஃபெஞ்சல் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு குறித்து அறிந்து மனமுடைந்தேன். இந்த துயர சம்பவத்தின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், உடைமைகள் சேதம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் மாநில அரசு நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.