இந்து துறவிக்காக ஆஜராகாத வழக்கறிஞர்கள்..! ஒரு மாதம் சிறை..! ஜன.2-க்கு வழக்கு ஒத்திவைப்பு..!
வங்கதேசத்தில் தேசத்துரோக குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி சார்பில் வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வராத காரணத்தினால், அவர் ஒரு மாதம் சிறையில் இருக்க வேண்டியிருக்கிறது.
முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் பதவியில் இருந்து விளக்கினார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற பேரணியில் அந்நாட்டு தேசியகொடியில் காவி கொடி ஏற்றிய புகாரில், அவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நவம்பர் 25ம் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். நவம்பர் 26ம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது வங்கதேச தலைநகர் டாக்கா உள்பட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த வன்முறை காரணமாக வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கறிஞர் கொல்லப்பட்டதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கம் சின்மோயின் வழக்கில் ஆஜராக தடை விதித்தது. சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் ராய் கொடூரமாக தாக்கப்பட்டார், மேலும் அவரது வீடு இஸ்லாமியர்களால் சூறையாடப்பட்டது என்று இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ் கூறியுள்ளார். மருத்துவமனை ஐசியூவில் வழக்கறிஞர் ராமன் ராய் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. சின்மோய் கிருஷ்ண தாசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருக்கும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேச அரசிடம் இஸ்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சின்மோய் கிருஷ்ண தாஸ் இஸ்கானின் துறவியாக இருந்தார், ஆனால் அந்த அமைப்பு செப்டம்பர் மாதம் அவரிடமிருந்து விலகிக் கொண்டது. இருப்பினும், தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அந்த அமைப்பு சார்பில் கருத்து தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு வாதாட முன்வருபவர்கள் பொதுவெளியில் தாக்கப்படுவார்கள் என்று வழக்கறிஞர்கள் எச்சரிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், டிசம்பர் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சட்டோகிராம் நீதிமன்றத்தில் சின்மோய் கிருஷ்ண தாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எந்த வழக்கறிஞர்களும் அவருக்காக ஆஜராகவில்லை. இதனையடுத்து, சின்மோய் கிருஷ்ண தாஸ் மீதான வழக்கு விசாரணையை நீதிபதி ஜனவரி 2-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத காரணத்தினால் இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் ஒரு மாதம் சிறையில் இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் 8 சதவீதம் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இந்துக்களுக்கு எதிராக நடந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More: மருத்துவர் உட்பட 7 தொழிலாளர்களை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!