தமிழ் நாட்டிலுள்ள இந்த கோயிலுக்கு சென்றால் திருப்பதிக்கு சென்ற பலனை அடையலாம்.!?
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ராமனர் திருக்கோயில். திருப்பதி வெங்கடாஜலபதி கடவுளின் அருளால் தான் இக்கோயில் கட்டப்பட்டது என்று நம்பப்பட்டு வருகிறது. இதனாலேயே இக்கோவிலுக்கு சென்று வந்தாலே திருப்பதிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.
மேலும் மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு "திருப்பதியில் ஓர் உற்சவம்" என்ற விசேஷமான அலங்காரம் செய்யப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாசலபதிக்கு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறுவது போலவே இக்கோயிலிலும் நடைபெறுவது சிறப்பானதாக கருதப்பட்டு வருகிறது.
பொதுவாக கோயில்களில் அமைந்திருக்கும் உற்சவமூர்த்தி சிலையின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோயிலில் அமைந்திருக்கும் உற்சவமூர்த்தியின் மார்பில் முக்கோண வடிவமும், அதன் நடுவில் மகாலட்சுமியின் கைரேகையும் பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு திருவோணத்தின் போதும் சத்யநாராயணா பூஜை நடைபெற்று கடவுளுக்கு மட்டை தேங்காய் படைத்து வழிபட்டு வருகின்றனர். கடவுளுக்கு படைக்கப்படும் மட்டை தேங்காயை வீட்டில் பூஜை வைத்து வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்று நம்பப்பட்டு வருகிறது.
மேலும் இக்கோயிலின் மிகச் சிறப்பான விஷயமாக கருதப்பட்டு வருவது உலகில் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்று முன்னேற வேண்டும் என்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள தன்வந்திரி சன்னதியில் நோய் நொடிகளை தீர்க்க வேண்டி சிறப்பான பிரசாதம் வழங்கப்படுகிறது.
அதாவது, மூலிகைகள் கலந்த சூரணமும், நல்லெண்ணெய், சுக்கு பொடி, மூலிகைகள், நாட்டு சக்கரை கலந்து தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை எடுத்துக் கொள்ளும் பக்தர்களுக்கு நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது இக்கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.