இறப்பு மற்றும் திருவிழாக்களில் பருந்துகள் வட்டமிட இதுதான் காரணமா.?! ஆச்சரிய தகவல்.!
நம்மில் பெரும்பாலான மக்கள் முக்கிய சுப நிகழ்ச்சிகள், கும்பாபிஷேகம், திருவிழா போன்றவற்றில் கருடன் மூன்று முறை வலம் வந்ததாக பேசுவதை பார்த்திருப்போம். ஏன் அதை நாம் கூட கண்கூடாகவே பலமுறை பார்த்திருப்போம். உண்மையில் அதுபோல நடக்கிறதா என்பது குறித்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பருந்து (கருடன்)கள் முன்பெல்லாம் வட்டமிடும் போது பலரும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூறி, கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். இதனால்தான் பருந்துக்கு கிருஷ்ண பருந்து என்ற பெயர் வந்தது. இந்த பருந்துகளுக்கு புறாக்கள், கிளிகள் மற்றும் காகங்கள் போல மனிதர்களுடன் உறவாடும் பழக்கம் இல்லை.
பருந்துகளில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று செம்பருந்து மற்றொன்று கரும்பருந்து. இந்த இரண்டு வகை பருந்துகளுமே நகரம் சார்ந்து வாழக்கூடியவை. எனவே தான் இவற்றை ஊர் பருந்து என்று கூறுவார்கள். இதில், கரும்பருந்து இறைச்சி கழிவுகளை சாப்பிடுகின்ற பழக்கம் வைத்திருப்பது. செம்பருந்து என்பது நீர் நிலைகளில் காணப்படும் தவளைகள் மற்றும் மீன்கள் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும். பருந்துகள் வட்டம் அடிக்க காரணம் என்னவென்றால், விமானத்தைப் போல அது நேராக பறந்து கொண்டு இருந்தால் உணவை தேட முடியாது. எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியில் உணவு இருக்கிறதா என்பதை கண்டறிய அப்படி ஒரே இடத்தில் பருந்துகள் வட்டம் அடிக்கின்றன.
பருந்துகள் கூர்மையான பார்வையை கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனுடன் அவை வட்டமிடும் போது தான் இன்னும் உயரமாக பறக்க முடியும். இதுவரை கவனத்தில் இருந்த பகுதியை விட சற்று அதிக உயரத்தை பார்க்க வேண்டும் என்றால் இது போல வட்டமடித்தால் தான் அவைகளால் பார்க்க முடியும். இதனால் அவைகளுக்கு அதிக ஆற்றல் வீணாகாது. ஆனால் இறப்பு, திருவிழா மற்றும் சுப காரியங்களில் தான் பருந்து வட்டம் அடிக்கிறது என்று கூறுவது தவறு. அதிலும் அவை வெறும் மூன்று முறை மட்டும் வட்டமிட்டது என்று கூறுவது மிக தவறு. அவை தனது இறையை கண்டறிய ஒரே இடத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் வட்டமிடும்.
தனது இரையை கண்டறிந்து விட்டால் வட்டமிடுவதை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு சென்று விடும். இல்லை இங்கு இரை கிடைக்காது என்று தோன்றினாலும் உடனடியாக அந்த இடத்தை விட்டு அது சென்று விடும். கீழே நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் மேலே பருந்து வட்டம் இடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நிறைய பேர் கருடன் என்றதும் அதை கழுகு என்று நினைத்துக் கொள்கிறார்கள். நீளமாக இறக்கை வைத்திருக்கும் எந்த பறவையை பார்த்தாலும் அதை கழுகு என்று நினைத்துக் கொள்கிறார்கள். கழுகு போல தான் பருந்தும் இருக்கும். ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதுபோல மக்களுக்கு ராஜாளி, வல்லூறு, கழுகு மற்றும் பருந்து உள்ளிட்ட பறவைகளுக்கு சரிவர வித்தியாசம் தெரிவதில்லை. இதற்கான குழப்பம் இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.