"வாரிசு உரிமை விதியை திருத்த வேண்டும்!" மறைந்த கேப்டன் அன்ஷுமான் சிங் பெற்றோர் கோரிக்கை..!! என்ன காரணம்?
கடந்தாண்டு ஜூலை 19ஆம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவால் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் சிக்கிய சக ராணுவ வீரர்களை கேப்டன் அன்ஷுமன் சிங் துணிச்சலாக சென்று அவர்களை மீட்டு வந்தார்.
தொடர்ந்து, தீ அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவின. குறிப்பாக, மருந்துகள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலும் தீ பரவியதை அடுத்து, பல உயிர் காக்கும் மருத்துகளை மீட்பதற்காக விரைந்த கேப்டன் அன்ஷுமன் சிங் தீயில் சிக்கினார். இதில் அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். கேப்டன் அன்ஷுமன் சிங்கின் இந்த வீரமரணத்தை போற்றும் விதமாக அவருக்கு கீர்த்தி சக்ரா விருது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மறைந்த கேப்டன் அன்ஷுமன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை, அவரின் சார்பாக அவரது மனைவி ஸ்மிருதி சிங் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றார்.
இந்த நிலையில்தான், அன்ஷுமான் பெற்றோர், மத்திய அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், தங்களது மகனின் மனைவி இனி ஒருபோதும் தங்களுடன் வசிக்கப்போவதில்லை. எனவே, இந்திய ராணுவத்தில், ராணுவ வீரர்களுக்குப் பிறகு அவர்களது நெருங்கிய உறவினர் அல்லது அவர்களது வாரிசு என்ற விதியில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு ராணுவ வீரரின் மரணத்துக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இது குறித்து அன்ஷுமான் சிங் தந்த கூறுகையில், எங்களது மருமகள் ஸ்மிருதி சிங் எங்களுடன் வசிக்கவில்லை. ஆனால், எங்களது மகனின் மரணத்துக்குப் பிறகு அவருக்குத்தான் அனைத்து பணப்பலன்களும் கிடைத்திருக்கிறது. எனவே, நெருங்கிய வாரிசு என்று கொண்டுவரப்பட்டிருக்கும் விதிமுறை சரியாக இல்லை. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியிருக்கிறோம். திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. அவர்களுக்குக் குழந்தையும் இல்லை. மகன் மரணமடைந்த பிறகு அவரது மனைவி எங்களுடன் வசிக்கவில்லை. இப்போது எங்களிடம் மகனின் புகைப்படமும் அதற்குப் போடப்பட்ட மாலையும்தான் இருக்கிறது என்கிறார்.
எனவே, மரணமடையும் ராணுவ வீரர்களின் நெருங்கிய உறவினர் அல்லது வாரிசு தொடர்பான விதியில் மாற்றம் செய்ய வேண்டும். ராணுவ வீரர்கள் மரணமடையும் நிலையில், அவரது மனைவி வீரரின் குடும்பத்துடன் இருக்கிறாரா என்பதையும், யார் உண்மையிலேயே அவரை நம்பியிருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த விதியில் திருத்தம் மேற்கொண்டால், எங்களைப் போல பல பெற்றோர் காப்பாற்றப்படுவார்கள் என்கிறார்கள்.
ஒருவர் ராணுவத்தில் சேரும்போது, அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர்தான், அவருக்கு அடுத்த நெருங்கிய உறவினராக சேர்க்கப்படும். ஒருவேளை ராணுவ வீரருக்கு திருமணமாகிவிட்டது என்றால், அவரது வாழ்க்கைத் துணையின் பெயர் சேர்க்கப்படும் விதியானது தற்போது கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read more | பெண்களே..!! நாளைக்கே (ஜூலை 13) உங்க அக்கவுண்டுக்கு பணம் வருது..!! செக் பண்ணுங்க..!!