8 வருட லவ்.. திருமணம் ஆன 2 மாதங்களில் உயிரிழந்த ராணுவ வீரரின் காதல் கதை..!! - மனைவி உருக்கம்
கடந்தாண்டு ஜூலை 19ஆம் தேதி அன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவால் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் சிக்கிய சக ராணுவ வீரர்களை கேப்டன் அன்ஷுமன் சிங் துணிச்சலாக சென்று அவர்களை மீட்டு வந்தார்.
தொடர்ந்து, தீ அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவின. குறிப்பாக, மருந்துகள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலும் தீ பரவியதை அடுத்து, பல உயிர் காக்கும் மருத்துகளை மீட்பதற்காக விரைந்த கேப்டன் அன்ஷுமன் சிங் தீயில் சிக்கினார். இதில் அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். கேப்டன் அன்ஷுமன் சிங்கின் இந்த வீரமரணத்தை போற்றும் விதமாக அவருக்கு கீர்த்தி சக்ரா விருது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மறைந்த கேப்டன் அன்ஷுமன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை, அவரின் சார்பாக அவரது மனைவி ஸ்மிருதி சிங் நேற்று (ஜூலை 6) குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றார். விருது விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் கேப்டன் அன்ஷுமன் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் மிகவும் உருக்கமாக பேசினார்.
அவர் பேசுகையில், "நாங்கள் இருவரும் கல்லூரியின் முதல் நாளிலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். எங்களுக்குள் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் சந்தித்தது பொறியியல் கல்லூரியில், ஆனால் அவருக்கு மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்தது. நாங்கள் சந்தித்து ஒரு மாதமே ஆகியிருந்தாலும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு நான் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக்கொள்ளாமல் தொலைத்தூர காதல் உறவில் இருந்தோம். அதன்பின்னர், அடுத்த கட்டம் குறித்து யோசித்து திருமணம் செய்துகொண்டோம்" என்றார்.
அன்ஷுமன் சிங் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் பட்டம் பெற்ற பின்னர் இருவருக்கு இடையே கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. அவர் உயிரிழப்பதற்கு முந்தைய நாள்தான் தங்களின் வருங்கால வாழ்க்கை குறித்து தங்களுள் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்த 50 ஆண்டுகளில் எங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டோம். வீடு கட்டுவது குறித்தும், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும் என பல விஷயங்களை அன்று பேசியிருந்தோம். ஆனால், ஜூலை 19ஆம் தேதி காலையில் எழுந்த உடன் அவர் உயிரிழந்த செய்தியே எனக்கு கிடைத்தது" என கூறி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதார்.
Read more | Flash: நீட் தேர்வு முறைகேடு… மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ…!