கடந்தாண்டு தளபதியாக..! இந்தாண்டு தலைவராக..! சந்திக்கும் விஜய்!! காத்திருக்கும் சர்ஃபைர்ஸ்!!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இதில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்கள் 3,25,305 பேரும், மாணவிகள் 3,93,890 பேரும் பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார். இதில் மாணவர்கள் 92.37% பேரும், மாணவிகள் 96.44% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலின மாணவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த தேர்வில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமி 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ/மாணவியர் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும். தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை இரண்டாம் இடத்திலும் ராமநாதபுரம் மூன்றாம் இடத்திலும் கன்னியாகுமரி 4ஆம் இடத்திலும் திருச்சி 5ஆம் இடத்திலும் உள்ளது.
கடந்த ஆண்டு சென்னை 29வது இடம் பிடித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு இடம் பின் தங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடைசி 10 இடங்களில் வட மாவட்டங்கள் உள்ளன. சென்னை, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி திருவள்ளூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை வேலூர் ஆகியவை கடைசி 10 இடங்களில் உள்ளன. பள்ளிகள் வாரியாக பார்த்தால், அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%, தனியார் பள்ளிகள் 91.43%, இருபாலர் பள்ளி 91.93%, பெண்கள் பள்ளிகள் 93.80% என தேர்ச்சி விகிதம் இருக்கிறது. இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூலி தொழிலாளி மகள் மாணவி காவிய ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது x பதிவில், "தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் தலைவராக மாணவர்களுடன் சந்திப்பு: கடந்தாண்டு ஒரு நடிகராக மாணவர்களை சந்தித்த விஜய், இந்தாண்டு அரசியல் கட்சித் தலைவராக சந்திக்கவுள்ளார். கடந்த வரும் சென்னை நீலாங்கரையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் என மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். மேலும் அசுரன் படத்தில் வரும் கல்வி குறித்தான வசனத்தை நடிகர் விஜய் பேசியது, மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். ஒரு அரசியல் கட்சித் தலைவராக விஜய், மாணவர்களை சந்திக்க இருப்பது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் என்ன பரிசு வழங்குவார், என்ன உரையாற்றப்போகிறார் என்பது தொடர்பான டாக் இப்போதில் இருந்தே எழத்தொடங்கிவிட்டன.