மனிதக்குலத்திற்குக் கடைசி எச்சரிக்கை..!! மிகப்பெரிய பேரிடர் காத்திருக்கு..!! கடலில் மூழ்கும் 6 தீவுகள்..!!
மீண்டும் விவாதமாக மாறியிருக்கிறது ஐபிசிசி. Intergovernmental Panel on Climate Change என்பதன் சுருக்கம்தான் இந்த ஐபிசிசி. தமிழில் இதைக் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு என்று சொல்வார்கள். இந்த மாடர்ன் உலகில் மண்டையை உடைக்கும் சமாச்சாரமாக மாறி இருக்கிறது காலநிலை மாற்றம் சார்ந்த சிக்கல்கள். இதனால் மனிதக் குலமே அழிவை நோக்கிச் செல்கிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இன்று வானத்தைப் பொத்துக்கொண்டு கொண்டும் பெய்யும், பேய் மழைக்கு இந்தக் காலநிலை மாற்றம் தான் காரணம் என்ற பேச்சு கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. அதற்குக் காரணம் சென்னையில் பெய்த அதிதீவிர கனமழை. அதனால் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள். ஒரே மாதத்திற்குத் தமிழ்நாடு மாபெரும் பேரிடரை சந்தித்துள்ளது. உண்மையில் இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம்..? பல ஆண்டுகளாக இந்த விஷயங்கள் குறித்துப் பேசி வரும் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் என்ன சொல்கிறார்? என்பதை தற்போது பார்க்கலாம்.
"காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 93 செ.மீ மழை பெய்துள்ளது. இது அந்த ஊரின் வருடாந்திர மழைபொழிவை விட அதிகம். தமிழ்நாட்டில் சமவெளியில் ஏற்பட்ட மிக அதிக கன மழைப்பொழிவு இதுதான். மலைப்பகுதியான காக்காசியில் (மாஞ்சோலை) 1992ஆம் ஆண்டு 96.5 செமீ மழை பதிவாகியுள்ளது. குறைந்த கால இடைவெளியில் அதிதீவிர கனமழை என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு கூறு, அதுவும் எல்-நினோ/சூப்பர் எல்-நினோ காலகட்டத்தில் இதைப்போன்ற தீவிர நிகழ்வுகளை அதிகம் எதிர்பார்க்க வேண்டும். இதைப்போலவே எல்லாமும் தீவிரமாக இருக்கும்" என்றார்.
தொடர்ந்து, ”உலகில் முதன்முதலாகக் கடலில்தான் உயிர்கள் தோன்றின. நாம் சுவாசிக்கின்ற ஆக்சிஜனில் 50 முதல் 70% காற்றைக் கடல்தான் தருகிறது. இந்தப் பூமியில் உயிர்கள் வாழ வேண்டுமென்றால், வெப்பம் வேண்டும். பல லட்சம் ஆண்டுகள் முன்பாக இந்த பூமி முழுவதும் பனிப் பிரதேசமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பனி விலகி, பரிணாம வளர்ச்சியில் உயிர்கள் தோன்றின. அதில் கடைசியாகத் தோன்றியவன்தான் மனிதர்கள். எங்குப் பல்லுயிரியம் அதிகம் இருக்கும்? அதிகமாக வெப்பம் உள்ள இடத்தில்தான் இருக்கும்.
கடந்த 10,000 வருடங்களாகத்தான் பூமியில் நிலையான தட்பவெப்பம் உள்ளது. ஆகவேதான் நாம் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். உயிர் வாழ ஓரளவுக்கு வெப்பம் தேவை என்பது உண்மை. ஆனால், தொழிற்புரட்சி என்ற பெயரில் நாம் கடந்த 200 ஆண்டுகளாக எந்தத் தாதுப்பொருட்கள் எல்லாம் பூமிக்குள்ளாக இருக்க வேண்டுமோ அதை எல்லாம் தோண்டி எடுத்து வருகிறோம். நிலக்கரி, கேஸ், யுரோனியம் என அனைத்தையும் எடுத்து எரித்து வருகிறோம். அது வளிமண்டலத்தில் போய் கார்ப்பனாக படிந்து வருகிறது.
சூரிய மண்டலத்திலிருந்து வரும் வெப்பத்தைப் பூமி தக்கவைக்கத் தொடங்கியது. அதனால் புவி வெப்ப மயமாதல் ஏற்பட்டது. அதனால் காலநிலை மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. இந்தப் புவிவெப்ப மயமாதல் என்ன செய்தது..? 2018இல் கேரளாவில் மலப்புரம் என்ற மாவட்டத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அதன் வாசலில் இரண்டு சின்ன பிள்ளைகள் சவமாகக் கிடத்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் சாவதற்கான காரணம் என்ன? கேரளாவில் 3 ஆயிரம் மிமீட்டர் மழை பெய்யும். அது மே கடைசி தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். ஆனால், 2018 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் 1020 மிமீட்டர் மழை 4 நாட்களில் பெய்தது. அந்த மழையில் 40 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டில் அதிதீவிர வெப்ப அலைகளால் 15,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே, எதிர்காலம் பற்றிய மிகப் பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள பல நாடுகள் சேர்ந்து Intergovernmental Panel on Climate Change என்ற உருவாக்கி உள்ளார். 25 ஆண்டுகளாக அந்த அமைப்பு காலநிலை மாற்றம் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இப்போது வெளியாகி உள்ள 6-வது அறிக்கை கிட்டத்தட்ட மனிதக்குலத்திற்குக் கடைசி எச்சரிக்கையாக வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா? 1986ஆம் ஆண்டு பிப்ரவரிக்குப் பின்னால் பிறந்த எந்தக் குழந்தையும் தன் வாழ்நாளில் ஒரே ஒரு இயல்பான மாதத்தைக் கூட பார்க்கவில்லை என்கிறது.
அதுவும் இப்போது பிறக்கின்ற குழந்தைகள் அவர்களின் 30 வயதைத் தொடும்போது அவர்களின் தாத்தா, பாட்டி அவர்களின் வாழ்நாளில் சந்தித்த ஒரேயொரு முறை பேரிடரை இந்தத் தலைமுறையினர் வருடத்திற்கு 2 முறை சந்திப்பார்கள் என்று எச்சரித்துள்ளது. வரப்போகும் 50 ஆண்டுகளில் இந்த நிலையை நாம் எட்ட இருக்கிறோம். மிகப் பெரிய பேரிடர் என்று கத்ரீனா புயல் தாக்கத்தைச் சொல்கிறார்கள். காலநிலை மாற்றம் என்பது அண்டார்டிக்காவில் நடக்கவில்லை. இமய மலையில் நடக்கவில்லை. உங்கள் காலுக்கு அடியில் நடிக்கிறது. மன்னார் வளைகுடாவில் 26 தீவுகள் இருந்தன. இப்போது 19 தீவுகள்தான் உள்ளன. 2034-க்குள் மேலும் 6 தீவுகள் கடலுக்குச் சென்றுவிடும் என்று ஒரு ஆய்வு சொல்லியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரத்தில் இருந்து நாகை வரை உள்ள கடல் பகுதியில் 5,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கடந்த 20 ஆண்டுகளில் கடலுக்குள் சென்றுள்ளது. இவ்வளவு பெரிய நிலப்பரப்பை நாம் இழந்துள்ளோம். மின் உற்பத்தி முறைகள் மாற வேண்டும். போக்குவரத்து முறைகளில் மாற்றம் வேண்டும். இயற்கையோடு கூடிய மின் உற்பத்திக்கு நாம் திரும்ப வேண்டும். தொழிற்சாலைகளின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அணுமின் நிலையங்கள் அகற்றப்பட வேண்டும். இவை மாறினால் நம் வருங்காலம் சிறக்கும்" என்கிறார்.