Election 2024 | குஷ்பூ ரூ.10,000/- கொடுக்கலாம்.! மன்சூர் அலிகான் நக்கல் பேட்டி.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன .
சர்ச்சைக்குரிய தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற கட்சியை நிறுவி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடத்தி வரும் அவர் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பாக குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயை பிச்சை என நடிகை குஷ்பு கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் அரசு கொடுக்கும் 1,000 ரூபாய் உரிமை தொகை பிச்சை என்றால் நடிகை குஷ்பூ 10,000 ரூபாய் மக்களுக்கு கொடுக்கலாமே என கேள்வி எழுப்பி இருக்கிறார். யாருடன் கூட்டணி அமைத்தாலும் தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என மன்சூர் அலி கான் கோரிக்கை வைத்திருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்காக அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணி செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.