கொடநாடு வழக்கு..!! எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கலாம்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா உள்ளது. அவர் இறந்த பிறகு ஏப்ரல் 23, 2017 அன்று அந்த பங்களாவில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது, கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ் சாமி உள்பட 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதிமுகவின் முந்தைய ஆட்சியில் வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தற்போது வரை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தாலும், இந்தக் குற்றச் சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
இந்நிலையில், கொடநாடு வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அனைவரையும் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீஷன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : மீண்டும் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட வரும் கனமழை..!! இந்த தேதிகளில் சம்பவம் இருக்கு..!!