'KKSSR' வழக்கு..!! "நீதிபதிக்கு அதிகாரம்.." உச்ச நீதிமன்றம் உத்தரவு.!
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சராக இருக்கும் KKSSR, தன் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை, தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனிமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதற்கான பரபரப்பு தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே இறுதி முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2001-2006 வருடங்களில் திமுக ஆட்சியின்போது கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் KKSSR ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் தனது வருமானத்தை மீறி ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அவரது மனைவி ஆதிலட்சுமியின் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவில்லை என்பதால், தாமாக முன்வந்து, உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் தற்போதைய அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரின் வழக்குகளையும் விசாரித்து வருகிறார்.
KKSSR தனது சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மறு ஆய்வு செய்வதை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து KKSSRஇன் வழக்கை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்று, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம் ஜோதிராமன் சமர்பித்த அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற தனிமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்க அனுமதி கோரி கடிதத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதை தலைமை நீதிபதி பார்ப்பதற்கு முன்னதாகவே, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை தனிமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தொடங்கிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பு அமைச்சர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.