பேரன்புமும், பெரும் காதலும்!. தன்னலமற்ற அன்பின் அடையாளம்!. இன்று தந்தையர் தினம்!
Father's Day: தந்தை… இந்த வார்த்தையே ஒரு பேரன்பை, ஆறுதலை, பொறுப்பை நினைவுப்படுத்தும் வார்த்தையாக இருக்கிறது. இந்தச் சமூகம் ஒரு தாயை கொண்டாடுவது போல, ஒரு தந்தையை கொண்டாடுவதில்லை, என்ற ஆதங்கம் ஆண்களிடம் நிலவுகிறது. இது ஆண்களுக்கு பெரும் உளவியல் சிக்கலை அளிப்பதாக இருப்பதை, நாம் எப்போதும் கவனித்ததில்லை. மகளின் படிப்புக்காக பல நாட்கள் சாப்பிடாமல் உறங்கிய தந்தைகள் அதிகம். படிப்பிற்காக நிலத்தை விற்று கல்லூரிகளுக்கு வெளியே ஏக்கத்தோடு காத்திருக்கும் தந்தைகள் அதிகம்.
மகளுக்கு பிடித்த உணவை, எந்த தூரத்திற்கும் சென்று வாங்கிக்கொண்டு வரும் தந்தைகள் இருக்கிறார்கள். குடும்பத்தை பிரிந்து அயல்நாட்டில் பலர் அவச்சொல் கேட்டு, வெறும் வீடியோ காலில் மகள் முகத்தை பார்த்து, அழாமல் பேசும் வித்தையையும் அவர்கள் கற்று வைத்திருப்பார்கள். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் அவர்களுக்கு, தங்களின் வலியை மட்டும் கண்ணீரால் வெளிப்படுத்த அவ்வளவு தயக்கம் இருக்கும். இதுபோன்ற உணர்ச்சி மிக்க தந்தைகளை நமது சினிமாக்களிலும் நாம் பார்த்திருக்கிறோம்.
இயக்குநர் ராமின் ‘தங்க மீன்கள்’ படத்தில் உள்ள ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கு முன்பு ஒரு வரி வரும் ‘ மகள்களை பெற்ற அப்பாவுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்ததல்ல என்பது’. இந்த படத்தில் தனது மகளுக்கு பிடித்த நாய் குட்டியை வாங்குவதற்காக அந்த தந்தை அலையும் காட்சிகள் நமக்கு கண்ணீர் வரவழைக்கும். அதுபோல் நண்பரிடத்தில் மகள் பள்ளி படிப்புக்காக கடன் கேட்டு நிற்கும் தந்தையாக இயக்குநர் ராம் அற்புதமாக நடித்திருப்பார்.
அதுபோல 2006-ல் வெளியான எம்டன் மகன் படத்தில், மகனை நாசர் கொமைபடுத்துவார். ஆனால் அந்த படத்தில் மகன் பரத்திற்கும், நாசருக்கும் இருக்கும் ஒரு ஊடாட்டமான அன்பை, ஒருகட்டத்தில் நாசர் மூலம் அழகுற வெளிகாட்டியிருப்பார் இயக்குநர். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ’வாரணம் ஆயிரம்’ படம் ‘ஒரு மகனுக்கு அப்பா எப்படி ஒரு ஹிரோவாக இருக்கிறார்’ என்பதை விவரித்து இருக்கும். அப்பாவின் காதல், வீட்டை காலி செய்தபோது அப்பாவுடன் சென்ற லாரிப் பயணம். இப்படியாக படம் முழுக்க அப்பாவை இயக்குநர் கொண்டாடி இருப்பார்.
சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து படத்தில் அப்பாவின் தியாகங்களை, ஒரு பாடல் மூலமே காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்த படத்தில் வரும் அப்பா தொடர்பான காட்சிகள் நம் கண்களை ஈரமாக்கிவிடும். பேரன்பு படத்தில் நடிக்கும் அப்பா மம்மூட்டி அன்பின் எல்லைக்கே சென்றிருப்பார். மாற்றுத் திறனாளி மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகளுக்கும், ஒரு அப்பாவிற்கும் இடையில் இருக்கும் உணர்வு கலந்த பயணம் தான், இந்த படமே. எல்லா கோணங்களிலிருந்து அப்பா மகள் உறவை இயக்குநர் அணுகியிருப்பார். 2013-ல் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என்ற பாடலை கேட்டு அழாமல் யாரால் இருக்க முடியும.
அன்னை ஒரு குழந்தையை ஒவ்வொரு விஷயங்களையும் சொல்லி சொல்லி வளர்ப்பது போல தந்தைகள் வளர்ப்பதில்லை. தங்கள் வாழ்வின் மூலம் வழிகாட்டுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தான் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுடைய தந்தை முன்மாதிரியாக (role model) இருக்கிறார்கள்.
முதல்முதலாக தந்தையர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற கருத்தை சொனோரா டாட் கூறியபோது பலர் சிரித்தனர். ஏனென்றால் பழங்காலம் தொட்டு தாய் மட்டுமே ஒரு குழந்தையின் ஒரே வளர்ப்பாளராகக் கருதப்படுகிறார். தாயுடன் ஒப்பிடும்போது தந்தையின் பங்கு பெரும்பாலும் இரண்டாம்பட்சம் தான். உண்மையில் ஒரு குழந்தைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையும் முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குழந்தைகள் தங்கள் ஆன்மீக, உணர்ச்சி, உடல், நிதி மற்றும் சமூக நலனுக்காக தங்கள் தந்தையை சார்ந்துள்ளனர்.
மகள்களை பொருத்தவரை, தந்தை தான் உலகின் தலைசிறந்த மனிதர். அவர்கள் வணங்கும் முதல் மனிதர். மகன்களுக்கு, தந்தை தான் முன்மாதிரி. அவர்கள் பின்பற்ற விரும்பும் வலிமையான மனிதர். பாரம்பரியமாக தந்தை என்பவர் குழந்தைகளுக்கான வழங்குநராகவும் வழிகாட்டியாகவும் காணப்பட்டாலும், இன்றைய தனிக்குடும்ப குடும்ப கலாச்சாரத்தில் அது மாறிவிட்டது.
தந்தையர் தினம் 1910-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.உலக அளவில் இன்று கொண்டாடப்படும் தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் மூன்றாம் ஞாயிற்று கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டப்படுகிறது. உலகில் உள்ள இன்ப துன்பங்களை நாம் பகுத்தாய்ந்து வளர உதவுவது நமது தந்தை. நம்மை தனது தோள்மீது ஏற்றி இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்யும் தந்தைக்கு நன்றி சொல்லும் நேரமிது.
தந்தையர் தின விழாவானது, ஒவ்வொரு அப்பாவின் நிபந்தனையற்ற அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. தந்தையர் தினத்தை கொண்டாடுவது தந்தைகளின் பங்களிப்பு சமூகம் மற்றும் குழந்தைகளால் அங்கீகரிக்கப்படுவதை உணர்த்தும் வகையில் அமைகிறது. ஆகவே தங்களைப் பற்றி பெருமை கொள்கிறார்கள்!
தந்தையர் தினத்தை கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் தங்கள் தந்தையுடன் இன்னும் நெருங்கி வருகிறார்கள். தந்தையர் தினக் கொண்டாட்டம் அவர்களின் வாழ்க்கையில், தந்தை வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி சிறிது நேரம் சிந்திக்க வைக்கிறது. இது அவர்களின் தந்தையால் வழங்கப்படும் தன்னலமற்ற கவனிப்பு, பாதுகாப்பைப் பாராட்ட ஒரு வாய்ப்பாகும். இதனால் தங்கள் அப்பாவுடன் உணர்ச்சி ரீதியாக நெருக்கமாக வருகிறார்கள்.
குழந்தைகள் அன்றைய முழு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு, தந்தையர்களுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவிக்க வேண்டும். அதற்கு மிகப்பெரிய காரியம் எல்லாம் கூட செய்ய வேண்டாம். தந்தையை புன்னகைக்க செய்யும் வகையில் சின்ன வார்த்தை, ஒரு பூ அல்லது 10 நிமிடம் அங்கிருந்து ஒரு உரையாடல் கூட போதும்.
தந்தையர் தினம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் தந்தை அந்தஸ்தில் இருப்பவர்களை மதித்து நடப்பது அவசியம். குறிப்பாக இந்த நாளில் தந்தைகளிடமும், தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களை வழிநடத்துபவர்களையும் பெருமை செய்வது மிகவும் அவசியம். அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்று, உங்கள் நன்றியுணர்வை செலுத்தி அவர்களை மகிழ்விக்க வேண்டும். சினிமாக்களில் மட்டுமல்ல, நமது மனத்திரையிலும், அப்பாவின் அன்பும், தியாகமும் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும்.