நாட்டுக்காக கணவரை கொன்று, மார்பகங்களை இழந்து..! போராடிய துணிச்சல் பெண்மணி..! வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!
இந்தியா முழுவதும் 78-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வுடன், நாடு முழுவதும் இந்த நாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேசியக் கொடியானது ஜூலை 22, 1947 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் ஆகஸ்ட் 15, 1947 அன்று அது இந்திய ஒன்றியக் கொடியாக முறையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நேரத்தில் இந்தியாவும், இந்திய வரலாறும் மறந்த ஒரு வீரமங்கை பற்றி நாம் காண்போம்.
ஆங்கிலத்தில் ஓர் சொல்லாடல் இருக்கிறது ‘Unsung Hero’, இதற்கு போற்றப்படாத ஹீரோக்கள் என்று அர்த்தம். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ‘சர்தார்’ கார்த்தி, ‘விக்ரம்’ கமல் போன்ற உளவாளிகள். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வீரதீர செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் இவர்களை பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள், இவர்களுக்கான அங்கீகாரம், அடையாளம் என எதுவும் கிடைத்திருக்காது. பெரும்பாலும் இப்படியான அன்சங் ஹீரோ-க்களில் நிறைய ஆண்களை பற்றி தான் அறிந்திருப்போம். இதில், ஒரு வீர மங்கை இருக்கிறார் அவர் தான் "நீரா ஆர்யா".
இந்த நீரா ஆர்யா நினைத்திருந்தால் நினைத்திருந்தால் கடைசி வரை ஆடம்பர வாழ்க்கை அனுபவித்து, தனது கடைசி நாள் வரை மாடமாளிகையில் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் தேர்வு செய்தது தேசமும், சுதந்திரமும். கட்டிய கணவருடன் போராடி, தனது தலைவரான சுபாஷ் சந்திர போஸ் உயிரை காத்து, சிறைச்சாலையில் பல கொடுமைகளை அனுபவித்து, தனது கடைசி காலக்கட்டத்தில் ஐதராபாத்தில் பூவிற்று, சாலையோரத்தில் தனது சிறிய குடிசையில் உயிரிழந்து கிடந்தார்.
நீரா ஆர்யா, ஐஎன்ஏ (இந்திய தேசிய இராணுவம்) இன் ஒரு பாடப்படாத போர்வீராங்கனை ஆவார். இந்திய தேசிய ராணுவத்தில் முதல் பெண் உளவாளி என்று பிரபலமாக அறியப்படும் நீரா ஆர்யா, இந்திய ராணுவத்தின் ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில் வீராங்கனையாக இருந்தவர். நீரா ஆர்யா பிறந்தது 1905ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் நாள். இவர் உத்திர பிரதேச மாநிலம், பாகுபத் மாவட்டத்தில் பிறந்தவர். நீராவின் தந்தை சேத் சஜூமால் ஒரு பிரபலமான தொழிலதிபர். தனது மகள் கொல்கத்தாவில் கல்வி பயில வேண்டும் என்று விரும்பிய சேத், நீராவை கொல்கத்தா அனுப்பி வைத்தார். கொல்கத்தாவில் கல்வி பயின்ற வந்த போது, தனது இளம் வயது முதலே இந்திய சுதந்திர போராட்டம் மீது ஈர்ப்பு ஏற்பட்ட நீரா, இந்திய தேசிய இராணுவமாக இயங்கி வந்த அசாத் ஹிந்த்-ல் சேர்ந்தார். அசாத் ஹிந்தின் பெண்கள் படையான ராணி ஜான்சி படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார் நீரா. இப்படியாக தான் நீரா ஆர்யாவின் இராணுவ பணி துவங்கியது.
நீரா திருமண வயதை எட்டிய போது, அவருக்கு ஏற்ற மணமகனை தேடிக்கொண்டிருந்த அவரது தந்தை சேத், பிரிட்டிஷ் இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஜெய் ரஞ்சன் தாஸ் என்பவருக்கு நீராவை திருமணம் செய்து வைத்தார். ஸ்ரீகாந்த் சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ஆப் இந்தியா என்ற பொறுப்பில் வேலை செய்து வந்தார்.
திருமணமான ஆரம்ப நாட்களிலேயே நீரா ஆர்யாவுக்கும் – ஸ்ரீகாந்த் ஜெய்க்கும் இடையே உரசல்களும், மனக்கசப்பும் உண்டானது. இவர்கள் இருவரும் கருத்தியல் ரீதியாக நேரெதிர் கோட்டில் பயணித்து வந்தனர். ஒருக்கட்டத்தில் ஸ்ரீகாந்த் ஜெய் நீராவுக்கும் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இயங்கி வந்த அசாத் ஹிந்த்க்கும் இடையே இருந்த தொடர்பினை கண்டறிந்தார். உடனே, நீராவிடம் அசாத் ஹிந்த் தலைவர்கள் மற்றும் நேதாஜி குறித்த தகவல்கள் தன்னிடம் கூறுமாறு வற்புறுத்தினார். ஆனால், நீரா அதற்கு மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையேயான சண்டை பெரிதானது.
நீரா அசாத் ஹிந்த்-காக பிரிட்டிஷ் அதிகாரிகளின் வீட்டில் உளவு வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முக்கியமான தகவல்கள் பகிர சுபாஷ் சந்திர போஸ் அவர்களை நேரில் சந்திக்க நீரா பயணித்த போது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஸ்ரீகாந்த், சுபாஷ் சந்திர போஸ் இருப்பிடத்தை கண்டுபிடித்தார். அப்போது ஸ்ரீகாந்த் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுபாஷ் சந்திர போஸின் வாகன ஓட்டுநர் குண்டடிப்பட்டார். அச்சமயத்தில் வேறுவழியின்றி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை காப்பாற்ற, தன் கணவர் ஸ்ரீகாந்தை கொலை செய்தார் நீரா ஆர்யா.
ஸ்ரீகாந்தை கொலை செய்த குற்றத்திற்காக நீராவிக்கு சிறைத்தண்டனை அளித்தது பிரிட்டிஷ் நீதிமன்றம். நீராவை கொடுமை செய்து எப்படியாவது சுபாஷ் சந்திர போஸ் இருப்பிடத்தை கண்டுபிடிக்க பிரிட்டிஷ் அரசு முயன்று வந்தது. ஆனால், தேச பக்தி நிறைந்த நீரா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சுபாஷ் சந்திர போஸ் இருப்பிடத்தை மட்டும் கூறினால், பெயில் அளித்து ஜெயிலில் இருந்து விடுவிப்பதாகவும் அறிவித்தனர். ஆயினும், நீரா ஆர்யா இணங்க மறுத்தார். இதனால், ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளின் விளைவாக நீரா தனது மார்பகங்களையும் இழக்க நேர்ந்தது. ஆயினும் தனது நிலைப்பாட்டில் இருந்து நீரா ஆர்யா மாறவில்லை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நீரா போல் விடுதலை போராட்ட காலத்தில் சிறைத்தண்டனை பெற்ற பலரும் விடுதலை அடைந்தனர். நீராவின் சில குறிப்புகளில், அவருடன் உளவாளியாக இருந்த பர்மாவை சேர்ந்த சரஸ்வதி ராஜாமணி பற்றிய தகவல்களும் இருந்தன. சரஸ்வதி ராஜாமணி பர்மாவில் வசித்து வந்த தமிழர். நீராவும், சரஸ்வதி ராஜாமணியும் இந்தியாவின் முதல் பெண் உணவாளிகள் என போற்றப்படுகின்றனர். தனது மொத்த சொத்துக்களையும் பர்மாவில் விடுத்து தமிழகம் வந்த குடும்பத்தை சேர்ந்தவர் சரஸ்வதி ராஜாமணி.
இவர்கள் இருவருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் வீட்டில் வேலை செய்வது போல உளவு பார்க்கும் வேலை அளிக்கப்பட்டிருந்ததாகவும். ஆண்கள் உடை அணிந்து மாறுவேடத்தில் முக்கிய அதிகாரிகள் மற்றும் அவர்கள் நடவடிக்கை குறித்து தங்கள் மேலிடத்திற்கு தகவல் அனுப்புவதை உளவு வேலையாக கொண்டிருந்தனர் என்றும் அறியவந்தது. இந்தியாவிற்காக பல தியாகங்களை செய்த நீரா ஆர்யா தனது கடைசி நாட்களில் ஐதராபாத் தெருக்களில் பூவிற்று கொண்டிருந்தார் எனவும், அப்போது இவர் ஒரு சிறிய குடிசையில் வசித்து வந்தார் எனவும் கூறப்படுகிறது. 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் நாள் சார்மினார் பகுதியில் நீரா ஆர்யா உயிரிழந்தார்.
இந்த 78-வது சுதந்திர தினத்தில், வரலாற்றில் இடம்பெறாத, பல இன்னல்களை அனுபவித்த, இந்திய ராணுவத்தின் “ஜான்சி ராணி ரெஜிமென்ட்டில்” வீராங்கனையாக இருந்த "நீரா ஆர்யா" அவர்களை நினைவுகொள்வதில் பெருமை கொள்கிறது 1newsnation.
Read More: Independence Day 2024 | சுதந்திர தினத்தில் ஏற்றும் தேசியக் கொடியின் வரலாறு பற்றி தெரியுமா?