அயோத்தியில் பரபரப்பு: "உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல்.." பிரிவினைவாத இயக்கம் எச்சரிக்கை.!
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு அயோத்தி நகரில் சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் என 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளும் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் பிரதிஷ்டை நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய பங்கு வகிக்கும் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் பிரதிஷ்டை ராமர் கோவிலில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக தயாராகி வரும் நிலையில் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காலிஸ்தான் பிரிவினை இயக்கத்தின் தலைவரான குர்பந்த்வந்த் பன்னுன் அயோத்தி நகரில் கலவரத்தை ஏற்படுத்தி உத்திர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு உத்திரபிரதேசத்தின் அயோத்தி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த 3 நபர்களை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவரிடம் இருந்து யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல பஞ்சாப் மாநில முதல்வரையும் குடியரசு தினத்தில் கொலை செய்வதாக மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அயோத்தி நகரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.