தினமும் ஒரே மாதிரி ரசம் செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமாக கேரளா ஸ்டைல் தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்.!?
பொதுவாக பலரது வீட்டிலும் சோறு, குழம்பு, கூட்டு என தினமும் வகை வகையாக செய்து சாப்பிட்டிருப்போம். கூடவே செரிமானத்திற்காக ரசமும் செய்து சாப்பிடுவோம். இந்த ரசம் தினமும் ஒரே மாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக, கேரளா ஸ்டைலில் சுவையான தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, நீர் போன்ற தேங்காய் பால் - 2 கப், கெட்டி தேங்காய் பால் - 1 கப், உப்பு - சுவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு..
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பச்சை மிளகாய் - 1, வரமிளகாய் - 1, நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு..
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன், பூண்டு - 3 பல்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வெள்ளை பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தக்காளியை புளியுடன் பிசைந்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு மற்றுமொரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்த தக்காளி, புளி தண்ணீர், அரைத்து வைத்த மசாலா கலவை இரண்டு கப் தண்ணீர் சேர்த்த தேங்காய் பால், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி பின்பு இந்த தேங்காய் பால் கலவையை ஊற்ற வேண்டும். பின்பு இந்த தேங்காய் பால் ரசம் நுரை கட்டி வரும்போது அடுப்பை அணைத்து விடவும். இதன் பின்பு ஒரு கப் கெட்டியான தேங்காய் பாலை ரசத்தில் ஊற்றி நன்றாக கலக்கி விட்டு கொத்தமல்லி தழைகளை தூவி 15 நிமிடத்திற்கு மூடி போட்டு மூடி விடவும். 15 நாள் நிமிடங்களுக்கு பிறகு பரிமாறினால் சுவையான கேரளா ஸ்டைல் தேங்காய் பால் ரசம் தயார்.