West Nile | கேரளாவில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி.!! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!!
கேரள மாநிலத்தில் மலப்புரம் கோழிக்கோடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல்(West Nile) எனப்படும் வர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதை தடுப்பதற்காக சுகாதாரத் துறை மற்றும் துப்புரவுத்துறை பணிகளை தீவிரபடுத்த சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டார்.
மேலும் இந்த காய்ச்சல் தொடர்பாக எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த மர்ம காய்ச்சலுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்த 2 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சூர் மாவட்டம் வாடனப்பள்ளியைச் சேர்ந்த 79 வயது முதியவர் பெஸ்ட் நைல்(West Nile) மர்ம காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த காய்ச்சலுக்கு மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல் கேரளாவில் இந்த காய்ச்சல் இருப்பதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் காய்ச்சலுடன் ஒப்பிடும்போது காய்ச்சலின் இறப்பு விகிதம் மிகக் குறைவு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெஸ்ட் நைல் காய்ச்சலானது க்யூலெக்ஸ் என்ற கொசுவினால் பரவுகிறது. இந்த காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு தசை வலி தலைசுற்றல் வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களில்1% சதவீதம் பேருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவு இழந்து மரணம் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த காய்ச்சலுக்கு தடுப்பூசிகளோ தடுப்பு மருந்துகளோ இல்லை. கொசுக்கடியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு வீடுகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் உடலை மறைக்கும் ஆடைகள் அணிவதோடு கொசுவலை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கடியை தவிர்க்கலாம்.