இஸ்ரோ ரகசியங்களை லீக் செய்ததாக நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு..! - CBI குற்றப்பத்திரிக்கையில் வெளிவந்த உண்மை!!
விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது ஐ.எஸ்.ஆர்.ஓ ரகசியங்கள் லீக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்டது என சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிரயோஜனிக் ராக்கெட் குறித்த வரைபடங்கள் வைத்திருந்ததாக மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் அவரது தோழி ஃபாசூயா ஹசன் ஆகியோர் 1994-ம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரோ ரகசியங்களை லீக் செய்ததாக கிரயோஜனிக் சிஸ்டம் திட்ட இயக்குநராக இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கைதுசெய்யப்பட்டார். அவருடன் விண்வெளி அமைப்பின் இணை இயக்குநர் சசிகுமாரன், ரஷ்யா விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிலதிபர் எஸ்.கே.சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.ஐ விசாரணைக்கு பிறகு அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். கிரயோஜனிக் வழக்கு அன்றைய முதல்வர் கருணாகரனின் பதவியைப் பறிக்கும் அளவிற்குப் பூகம்பத்தை ஏற்படுத்தியது. நம்பி நாராயணன் தனி ஒருவராக சுமார் 25 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கிற்கு மூல காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கத் தனி கமிட்டி அமைத்து கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
அந்த கமிட்டியின் விசாரணை அடிப்படையில் சி.பி.ஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த விசாரணை முடித்து சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் ஐ.எஸ்.ஆர்.ஓ ரகசியங்கள் லீக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரத்தில் ஓட்டல் அறையில் வைத்து மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதாவை முன்னாள் இன்ஸ்பெக்டர் விஜயன் பலாத்காரம் செய்ய முயற்சித்ததை தடுத்ததால் தான் இஸ்ரோ ரகசியங்களை வெளிநாட்டுக்கு கடத்தியதாக பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விஜயன் திருவனந்தபுரத்தில் ஒரு லாட்ஜில் சோதனை நடத்தினார். அப்போது ஒரு அறையில் தங்கியிருந்த மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதாவை அவர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் மரியம் ரஷீதா அதற்கு உடன்படவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் விண்வெளி ஆய்வு மையம் ரகசியங்களை கடத்தியதாக பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் டிஜிபிக்களான ஸ்ரீகுமார் மற்றும் ராஜீவன் ஆகியோர்தான் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
போலீஸ் நிலையத்தில் வைத்து நம்பி நாராயணன் கடுமையாக தாக்கப்பட்டார். ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று முன்னாள் ஐபி உதவி இயக்குனர் வினோத்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மரியம் ரஷீதா கைதானவுடன் பத்திரிகைகளில் செய்திகள் வரத் தொடங்கின. அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more | பன்றி சிறுநீரகம் பொறுத்தப்பட்ட இரண்டாவது நபர் 47 நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு..!!