பரபரப்பு தீர்ப்பு: கேரள 'பாஜக' தலைவர் கொலை வழக்கு..! தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு தூக்கு.!
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு மரண தண்டனை வழங்கி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா நகரை சேர்ந்த வழக்கறிஞரான ரஞ்சித் ஸ்ரீனிவாசன் பாரதிய ஜனதா கட்சியின் கமிட்டி உறுப்பினராகவும் ஓ.பி.சி பிரிவின் மாநில செயலாளர் ஆகவும் இருந்து வந்தவர்.
2021 ஆம் வருடம் டிசம்பர் 19ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிகாலையில் வீடு புகுந்து ரஞ்சித் ஸ்ரீனிவாசனை வெட்டி படுகொலை செய்தனர். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.ஷான் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களில் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இது நடைபெற்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் 8 பேர் முக்கிய கொலை குற்றவாளிகளாகவும் 7 பேர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தது.
தற்போது இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் மரண தண்டனை வழங்கி கேரள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற கொடூர கொலையில் பரபரப்பான தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.