கேரள ATM கொள்ளை சம்பவம்... வடமாநில பவாரியா கும்பலா...? விசாரணையை தீவிர படுத்திய தமிழக காவல்துறை...!
கேரள மாநில ஏடிஎம்களில் கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற ஹரியானா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 7 பேரை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் காயமடைந்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வடமாநில கும்பல் கொள்ளையடித்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் சொகுசு காரை ராஜஸ்தான் பதிவெண் கொண்டகன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு, அந்த கும்பல் வடமாநிலத்துக்கு தப்ப முயன்றனர். தகவலறிந்த கேரள போலீஸார் லாரியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் தப்பிய லாரி, தமிழக எல்லைக்குள் கொள்ளையர்கள் நுழைந்துவிட்டனர்.
இந்த கன்டெய்னர் லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாகச் செல்வதாக நேற்று காலை நாமக்கல் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன் தலைமையிலான போலீஸார் குமாரபாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, வாகனங்கள் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றனர்.
இதையடுத்து லாரியை போலீஸார் விரட்டிச் சென்று, சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரியை வெப்படை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். வழியில் லாரி ஓட்டுநரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜூமான் கன்டெய்னர் கதவைத் திறந்துள்ளார். உடனே ஒருவர் லாரியில் இருந்து பணப்பையுடன் குதித்து, அங்கிருந்த காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அவருடன் ஜூமானும் தப்பி ஓட முயன்றார். உடனே காவல் ஆய்வாளர் தவமணி துப்பாக்கியால் சுட்டதில், சம்பவ இடத்திலேயே ஜூமான் உயிரிழந்தார். காவல்துறையினர் சுட்டதில் அஜார் அலி என்ற கொள்ளையனின் கால்களில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1995 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் தனியார் உள்ள வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்தது. இந்த கொள்ளை பவாரியா கொள்ளை கும்பல் வீடுகளில் உள்ளவர்களை கொன்று கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரியில் சொந்த ஊர்களுக்கு தப்பித்து செல்வார்கள். அப்படி ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடித்த பல்வால் கொள்ளையர்கள் பவாரியா கும்பலை போல் கண்டெய்னரில் காரை ஏற்றி தப்ப முயன்று சிக்கியது தெரியவந்துள்ளது. இவர்கள் பவாரியா கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .