பதவி ஏற்ற முதல் நாளே அதிரடி!! ரிஷி சுனக் திட்டங்களுக்கு முற்று புள்ளி வைத்த ஸ்டார்மர்!!
பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது. கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக் பதவியை இழக்கிறார். பிரிட்டனில் மொத்தமுள்ள 650 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றது.
அதனைத்தொடர்ந்து, தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டார்மர் தான் புதிய பிரதமராகப் பதவி ஏற்றார். பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர், பதவிக்கு வந்த முதல் நாளே ரிஷி சுனக் நிறைவேற்றத் துடித்த, செலவு அதிகம் கொண்ட திட்டத்தை ரத்து செய்தார். ரிஷி சுனக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்களில் ஒன்றான இது, மக்களை ஏமாற்றும் திட்டம் என விமர்சித்த அவர், இதை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
பிரிட்டனுக்கு வரும் மக்களைக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதே இத்திட்டமாகும். அந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் சிறிய படகுகளில் ஆபத்தான முறையில் பிரிட்டனுக்குப் புகலிடம் கோரி வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரிஷி சுனக் காலத்திலேயே ருவாண்டா அரசுக்குப் பிரிட்டன் பல மில்லியன் பவுண்டுகளை அளித்தது. அகதிகளைத் தங்க வைக்கத் தங்குமிடங்கள், அதிகாரிகளை நியமிக்க இந்த தொகையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தில் குழப்பங்கள் இருந்ததால் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இதை முழுமையாக ரத்து செய்யப் போவதாகப் பிரிட்டன் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ருவாண்டா திட்டம் தொடங்குவதற்கு முன்பே புதைக்கப்பட்டுவிட்டது. இது புகலிடம் கோர விரும்புவோரைத் தடுக்க தவறிவிட்டது. எனவே, மக்களை ஏமாற்ற நான் இந்தத் திட்டத்தை மேலும் தொடர தயாராக இல்லை" என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.