கொரோனா தடுப்பு மருந்துகளை ரெடியா வச்சிருங்க..!! தமிழ்நாடு அரசுக்கு வந்த முக்கிய அலர்ட்..!!
கொரோனா தடுப்பு அவசர மருந்துக்களை போதியளவில் கையிருப்பு வைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 2 ஆண்டுகளாக கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பிறகு ஓரளவு நிலைமை சரியாகி வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் நாடு முழுவதும் பரவலாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் இப்போதே முன்னெச்சரிகை நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு உட்பட மாநிலங்களின் சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும் என்றும் வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் ஆக்சிஜன் பைப் லைன்கள் சீராக இயங்குகிறதா? என்பதையும் முன்கூட்டியே சோதனை செய்து பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் என அனைவரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசும் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.