கர்நாடக மாநில எஸ்பி கோபிசெட்டிபாளையத்தில் கைது.! காதலியை தாக்கிய வழக்கில் சிக்கியது அம்பலம்.!
கர்நாடக மாநில எஸ்பி கோபிசெட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதலி சுஜாதா என்பவரை தாக்கிய குற்றத்திற்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருமையா வீதியில் வசித்து வரும் மாதேஸ்வரன் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரப் பணியாளர் ஆவார். இவர் தற்போது சித்த மருத்துவராக இருக்கிறார். இவரது மகன் அருண் ரெங்கராஜன், கடந்த 2012ஆம் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் ஐபிஎஸ் ஆக பொறுப்பேற்றார்.
அதே மாநிலத்தில் வேலை புரிந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி இலக்கியா கருணாகரனை மணம் புரிந்து, இரண்டு பிள்ளைகளை பெற்றார். பின்னர் பணியிட மாறுதலுக்காக இவர்கள் கர்நாடகா மாநிலத்திற்கு வந்தனர்.
அருண் ரெங்கராஜன் கலபுர்கி மாவட்டத்தில் உள் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, அதே மாவட்டத்தில் வேலை செய்த சுஜாதா என்று சப்-இன்ஸ்பெக்டருடன் பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் காவலராக உள்ளார். இருவரின் பழக்கத்தையும் அறிந்த கண்டப்பா, இதுகுறித்து அருண் ரெங்கராஜின் மனைவியிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அருண் ரெங்கராஜ், கண்டப்பாவை தாக்கினார்.
இதுகுறித்து அருண் ரெங்கராஜின் மேல் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே தார்வார் மாவட்ட உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி யாக அருண் ரெங்கராஜ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியும் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் எனத் தெரிகிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அருண் ரெங்கராஜன், சுஜாதாவை அழைத்துக் கொண்டு கோபிசெட்டிபாளையம் சென்றுள்ளார். இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண் ரெங்கராஜன் சுஜாதாவை தாக்கியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அருண் ரெங்கராஜன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆபாச வார்த்தைகளால் திட்டியதாலும், தாக்கியதாலும், கொலை மிரட்டல் விடுத்ததாலும் பெண்கள் வன்கொடுமை போன்ற ஐந்து சட்டப் பிரிவுகளின் கீழ் அருண் ரெங்கராஜின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜய் அழகிரி இந்த வழக்கை விசாரித்த பின், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தார். கர்நாடக மாநில எஸ்பி, கோபிசெட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.