விவசாயியை அனுமதிக்காத வணிக வளாகத்தை மூடுமாறு கர்நாடக அரசு அதிரடி உத்தரவு..!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ராணிபென்னூரைச் சேர்ந்தவர் பகீரப்பா. இவரது மகன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பகீரப்பா ராணிபென்னூரில் இருந்து பெங்களூரு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை, ராஜாஜிநகர் அருகே உள்ள மகடி சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு, திரைப்படம் பார்ப்பதற்காக, தனது மகனுடன் பகீரப்பா சென்றுள்ளார்.
அப்போது அவர் வேட்டி அணிந்து தலைப்பாகை அணிந்திருந்தார். இதனால், வாட்ச்மேன், அவரை வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், பகீரப்பா தனது மகனுடன் வணிக வளாகத்தில் இருந்து திரும்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னட அமைப்பினர் நேற்று காலை வணிக வளாகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வணிக வளாகத்துக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.
தொழிலதிபர் என்ற முறையில் உரிமையாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். பின்னர், நடந்த சம்பவத்திற்கு வணிக வளாக நிர்வாகம் மன்னிப்பு கோரியது. இதற்கிடையே, வணிக வளாகத்திற்குள் செல்ல விவசாயியை அனுமதிக்க மறுத்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வணிக வளாகத்தை ஒரு வாரத்திற்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More : சென்னை மக்களே தயாரா..? சித் ஸ்ரீராமின் கான்செர்ட்..!! உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..!! டைம் இல்ல..!!