Wayanad Landslide | பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும்..!! - கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் 100 வீடுகளை கட்டித் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தார்.
கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்தனர். தற்போதைய நிலவரப்படி 358 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தெர்மல் ஸ்கேனர் மட்டுமன்றி, ட்ரோனில்ரேடார் பொருத்தி தேடும் பணியும் நடைபெறுகிறது. மீட்பு பணியில் மோப்ப நாய்களையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் உருவான மண்மேடுகளில் யாராவது சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் சுற்றி வருகின்றன. தன்னார்வலர்கள், பொதுமக்களும் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 5வது நாளாக மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கர்நாடகா ஆதரவாக நிற்கிறது. கர்நாடகாவின் ஆதரவையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா 100 வீடுகள் கட்டித் தரும் என்பதையும் முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன். நாம் ஒன்றாக இணைந்து மீண்டெழுவோம்; நம்பிக்கையை மீட்டெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று பார்வையிட்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் சார்பில் 100 இடங்கள் கட்டித்தரப்படும் என உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.