மக்கள் ஆதரவு இருக்கும் வரை ராஜினாமா செய்ய மாட்டேன்..!! - முடா ஊழல் குறித்து சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், மக்கள் ஆதரவு இருக்கும் வரை யாருக்காகவும் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறியுள்ளார். கர்நாடக மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா இருந்து வருகிறார். இவரது மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக ‘மூடா’ எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
இதில் பார்வதாயிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால், முதல்வரின் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் மீது விசாரணை நடத்துவதற்கு, கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். ஆளுநர் தனது அதிகாரத்தை சட்டத் துக்கு புறம்பாக பயன்படுத்தியதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, ‘ஊழல் தடுப்பு சட்டம் 17 (ஏ) பிரிவின் கீழ் ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நில விற்பனையாளர் தேவராஜ் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மைசூருவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கிவைத்துவிட்டு, நிகழ்ச்சியில் பேசிய சித்தராமையா, “நான் ராஜினாமா செய்ய மாட்டேன், யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டேன். நீதிமன்றங்கள் உள்ளன, அதையும் தாண்டி மனசாட்சி இருக்கிறது, நீதிமன்றங்களை விட மனசாட்சிதான் உச்ச நீதிமன்றம் என்று மகாத்மா காந்தி கூறினார். என் மனசாட்சி தெளிவாக உள்ளது, மக்கள் ஆதரவு இருக்கும் வரை நான் அசைக்க மாட்டேன். அரசியல் சவால்களைக் கண்டு பயப்பட மாட்டேன் என்றும் அவர் கூறினார். தனது எதிரிகள் பிரச்சனையை ஏற்படுத்த முயன்றாலும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எந்த தடைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
Read more ; தூத்துக்குடி – மாலத்தீவு!. நாளை முதல் கப்பல் போக்குவரத்து சேவை!