கந்த சஷ்டி2024 விரதம்!. முருகன் நடத்திய போர்!. 5ம் நாள் விசேஷ சிறப்புகள் என்னென்ன?.
Shashti 5th day fast: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி, வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. விழா தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 5ம் நாளான இன்று அதிகாலை விஸ்வரூப தீபாராதனை நடைப்பெற்றது. சஷ்டி விரதத்தில் மிக முக்கியமான நாள் இந்த ஐந்தாம் நாளாகும். இந்த நாளில் தான் முருகப் பெருமான் சூரனை எதிர்த்து போர் புரிவதற்காக அன்னை பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கக் கூடிய நிகழ்வு நடைபெறும் நாளாகும். அதனால் முருகனின் முகத்தில் ஒரு விதமான வேகம் காணப்படும். தன்னை நம்பி சரணடைந்த தேவர்களை காக்க வேண்டும் என்ற வேகத்துடன் முருகப் பெருமான் போருக்கும் புறப்படும் நாள் இந்த ஐந்தாம் நாள் தான்.
பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான். சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்தி ரபுரியை ராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலை களைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரம் பேர் பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.
சூரனை வதம் செய்வதற்காக முருகப் பெருமான் புறப்பட்ட போது உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றாக்கி, அதில் தன்னுடைய சக்தியையும் சேர்த்து வேலாக மாற்றினார் சிவபெருமான். அதை அப்படியே அன்னை பராசக்தியிடம் கொடுத்து, முருகனுக்கு ஆசி வழங்கி அனுப்பும் படி தெரிவித்தார், பராசக்தி, தன்னுடைய சக்தியையும் அந்த வேலுக்கு கொடுத்து, அதை சக்தி வேலாக்கி, முருகுப் பெருமானிடம் கொடுத்தாள். அன்னையில் இருந்த சக்தி வேலை முருகன் வாங்கியதும் அது வெற்றிவேலாக மாறியது. அந்த வேலைக் கொண்டு பகைவர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்டார் முருகப் பெருமான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கந்தசஷ்டியின் ஐந்தாம் நாளில் ஷட்கோண கோலத்தில் "ப" என்ற எழுத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஆறு விளக்கும் ஏற்றுபவர்களும், ஒவ்வொரு விளக்காக அதிகரிப்பவர்களும் சரி காலை, மாலை இரு வேளையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமான தேன், திணை மாவு, பழங்கள் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். அதே பொருட்களை இன்று தானமாக வழங்குவதும் சிறந்தது. முருகனுக்கு படைத்து விட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம்.
கந்தசஷ்டியின் ஐந்தாம் நாளில் முருகப் பெருமானை வழிபடுவதால் சொந்த வீடு யோகம் அமையும். பகைகள், தடைகள் விலகும். ஐந்தாம் நாள் வேலுக்குரிய தினம் என்பதால் இந்த நாளில் வேல் வழிபாடு செய்வது சிறந்தது. வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் அதற்கு தண்ணீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். வேல் இல்லாதவர்கள் முருகனின் படத்தில் இருக்கும் வேலுக்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து வேல் மாறல், வேல் விருத்தம் ஆகியவற்றை படித்து வழிபடுவது சிறப்பு.
Readmore: அமெரிக்க அதிபர் தேர்தல்!. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!. டொனால்ட் டிரம்ப் முன்னிலை!.